சென்னை:

வடசென்னைப் பகுதியில்  100க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி விற்பனை செய்து வந்த 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த கும்பலிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

வடசென்னையின் பிரதான பகுதிகளான பெரம்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், வியாசர்பாடி உள்பல பல பகுதிகளில் அவ்வப்போது இரு சக்கர வாகனங்கள் காணாமல் போவது தொடர்கதையாக இருந்து வந்தது. இது தொடர்பாக அங்குள்ள காவல்நிலையங்களில் ஏராளமான புகார்கள் உள்ளன.

இந்த நிலையில், திருட்டுக்கும்பல் குறித்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருட்டு போன பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். அதில் 3 பேர் கொண்ட கும்பலே  பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் புரசைவாக்கம் பகுதியில் டவுட்டனம் பாலத்திற்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடும்போது,  3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் மடக்கி கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி விசாரணையைத் தொடர்ந்து,  திருட்டுப்பேர்வழிகளான அந்த மூன்று பேரும், திருமழிசை பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன், அம்பத்தூரைச் சேர்ந்த சாமுவேல் மற்றும் கள்ளிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரிய வந்தது.

இந்த 3 பேரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக  நூற்றுக்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகனங்களை திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த  30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மீட்ட  வேப்பேரி காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.