பிகினி தினம்: கவர்ச்சி அல்ல போராட்டத்தின் வெளிப்பாடுதான்!
ஜூலை 5ம் தேதியான இன்று “உலக பிகினி (நீச்சலுடை) தினம்” என்று சமூகவலைதளங்களில் பலரும் நீச்சலுடை பெண்களின் படத்தை வெளியிட்டு “கிளாமராக” வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பிகினி தினம் என்பது ஒரு போராட்டத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
அதைக் கொஞ்சம் பார்ப்போம்…
1946இல் ஜூலை 5ம் தேதிதான் பிரெஞ்சு ஆடைவடிவமைப்பாளரான லூயி ரியார்த், இந்த பிகினி என்கிற ஆடையை பாரிஸ் நகரத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
பாரிஸ் இப்போது போல அப்போது “ப்ரீ”யாக இல்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த மக்கள்.
ஆகவே உடலின் பெரும்பகுதியினை வெளிக்காட்டுகிறது இந்த உடை என்று எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், “இந்த உடையினை யாரும் பொதுவில் அணியக்கூடாது” என்ற குரல்கள் எழுந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக, “பிகினி அணிவது பாவமான செயல்” என்று கத்தோலிக கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாத்திகன் அறிவித்தது.
இதையடுத்து ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஆஸ்திரியா நாடுகளிலும், அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் பிகினி தடைசெய்யப்பட்டது.
இதனால் பிகினியை வடிவமைத்த லூயி ரியார்த், “இந்த பிகனி ஆடையை வெற்றிகரமா விற்பனை செய்ய முடியாது” என்று தீர்மானித்து பிகினி ஆடைகளைத் தயாரிப்பதை குறைத்துக்கொண்டார்.
ஆனால், பெண்ணுரிமை இயக்கத்தினர், வெகுண்டெழுந்தனர். தங்களது ஆடை சுதந்திரத்தை இன்னொருவர் தீர்மானிப்பதா என்று குரல் எழுப்பினர்.
இவர்களுக்கு ஆதரவாக பிகினி உடை தயாரிப்பாளர்களும் இருந்தனர்.
குறைந்த மூலப்பொருள் முதலீட்டில் அதிக இலாபம், உலகளாவிய சந்தை போன்ற பிகினியில் இருக்கும் வியாபார நன்மைகளை பிகினி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இழக்கத்தயாராக இல்லை.
அதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவிவந்த எதிர்ப்புகளையும் மீறி, பிகினியை பிரபலமாக்க முயன்றனர். அதன் ஒரு பகுதியாக 1951இல் உலக பிகினி ஆடைத் திருவிழா பிரிட்டனில் நடத்தப்பட்டது. அப்போட்டிதான் பின்னாளில் “உலக அழகிப் போட்டியாக” மாறியது.
ஆம்… இன்றைக்கும் நடக்கிற உலக அழகிப்போட்டியானது, அழகானவர்களைத்(?) தேர்ந்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல, பிகினி என்கிற ஆடை “சுதந்திரத்துக்காக” உருவானதே.
ஒருவழியாக பிகினி உடை பிரபலமாகத் துவங்கியது. 1950களில் நடந்த எல்லா கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் பிகினி அணிவகுப்பு நடத்தப்பட்டு பிகினி ஆடை மேலும் பிரபலப்படுத்தப்பட்டது.
பிகினி அறிமுகப்படுத்தப்பட்டு 70 வருடங்கள் ஆகின்றன. இன்றைக்கு பிகினி நீச்சல் உடையாகவும், ஏராளமான விளையாட்டுக்களின் அதிகாரப்பூர்வ ஆடையாகவும் மாறியிருக்கிறது.