கும்பல் கொலைக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நேற்று கும்பல் கொலைக்கு எதிரான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக நாடெங்கும் கும்பலால் கொல்லப்படுவார் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இத்தகைய கொலைகள் அதிகம் நடக்கின்றன. பசுப் பாதுகாவலர்கள் என்னும் பெயரில் ஒரு சில விஷமிகள் மாடுகளை ஓட்டிச் சென்ற இஸ்லாமியர்களை மாடுகளைக் கடத்துவதாகக் குற்றம் சாட்டி அடித்துக் கொன்ற நிகழ்வுகள் பல நடந்துள்ளன.

சமீபகாலமாக ஜெய்ஸ்ரீராம் எனக் கூறச் சொல்லி அதற்கு மறுப்போரைக் கும்பல் கொலை செய்வது நிகழ்ந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் கும்பல் கொலை செய்பவர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய, ஜாமீனில் வர முடியாத, குற்றவியல் நடவடிக்கை கருதப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த சட்ட மசோதாவில் கும்பல் கொலைகளைத் தடுக்க ஒரு சட்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் அரசு, “கும்பல் கொலையில் பல உயிரிழப்பு, படுகாயங்கள் மற்றும் அப்பாவிகள் கொல்லப்படுவது நடக்கின்றது. இந்த மசோதாவின் மூலம் அந்த கொடூரம் நிற்கும் என அரசு நம்புகிறது. அத்துடன் வெறுப்பு மற்றும் சகிப்பில்லா தன்மை பெருகி கும்பல் கொலை உள்ளிட்ட சிறப்புக் குற்றங்கள் நிகழ்வது தடுத்துநிறுத்தப்படும் என அரசு நம்புகிறது” எனத் தெரிவித்துள்ளது/