பில் கேட்ஸ் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம் அடைந்தார்

வாஷிங்டன்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்சுடன் இணைந்து நிறுவிய பால் ஆலன் புற்று நோயால் மரணம் அடைந்தார்.

அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் நகரில் ரெட்மாண்ட் நகர் பகுதியில் அமைந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த நிறுவனம் கணினிக்கு தேவையான பல வகை மென்பொருட்கள் தயாரிப்பு, அவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பல செயல்பாடுகளில் ஈடு பட்டு வருகிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகிய இருவரும் இணைந்து இந்நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

கடந்த 9 ஆண்டுகளாக பால் ஆலன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடும் துயருற்று வந்தார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். பால் ஆலனின் மரணம் மென்பொருள் வல்லுனர்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

எபோலா நோய் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆப்ரிக்க நாடுகளுக்கு 10 கோடி அமெரிக்க டாலரை பால் ஆலன் நன்கொடையாக வழங்கி உள்ளார். இவர் ஐடியா மேன் என்னும் புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவரின் மரணம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு பேரிழப்பாகும்.