காந்தி & கிங் ஜூனியர் புகழை இணைந்து பரப்ப அமெரிக்க காங்கிரஸில் மசோதா..!

வாஷிங்டன்: காந்தியடிகள் மற்றும் அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் புகழைப் பரப்பும் வகையில் நிதி ஒதுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லூயிஸ்.

அந்த மசோதாவில், “மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை போற்றும் வகையில், அவரதுப் புகழை அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முழுவதும் பரப்ப வேண்டும்.

அதைப்போன்றே, அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைக்காக காந்திய வழியில் போராடிய மறைந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் புகழையும் பரவச் செய்ய வேண்டும்.

இந்தப் பணிகளை அடுத்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளும் பொருட்டு, பட்ஜெட்டில் 1050 கோடி ஒதுக்க வேண்டும். மேலும், காந்தி – கிங் (ஜூனியர்) மேம்பாட்டு அறக்கட்டளை அமைக்க உதவுவதோடு, அந்த அறக்கட்டளையை நிர்வகிப்பதற்கான அமைப்பையும் இருநாட்டு அரசுகளும் இணைந்து ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு இந்திய வம்சாவளி பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அமித் பெரா, ரோ கன்னா, பிரமீளா உள்ளிட்ட 6 பேர்களிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.