நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் குமரேசன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

“கோரிகாவுன்கள் முதல் குடிக்காடுகள் வரையில்…” என்ற தலைப்பில் எழுதிய பதிவு:

அது நடந்து 200 ஆண்டுகள் ஓடிவிட்டன. பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதிகளை மறுபடியும் கைப்பற்றுவதற்காக, அதற்கு முன் தோற்கடிக்கப்பட்டிருந்த மன்னர்கள் சிறு சிறு படைகளை அமைத்துப் போராடினார்கள். அதிலும் தோற்கடிக்கப்பட்டார்கள். பிற்காலத்தில்தான், மறுபடி மன்னர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்காக அல்லாமல், முன்பு அவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த பகுதிகளை இணைத்து, ஒட்டுமொத்தமாக அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றும் விடுதலைப் போராட்டம் உருவெடுத்தது.

மராத்தா வட்டாரத்தில் அன்று (19ம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில்) அப்படிப் போராடிய ஒரு பிரிவுதான் பேஷ்வா குழு. அவர்களை ஒடுக்குவதற்கு கம்பெனியால் அனுப்பப்பட்ட படை, எண்ணிக்கையில் அதிகமாகவும் நவீன ஆயுதங்களின் துணையோடும் இருந்ததால் பேஷ்வா படை முறியடிக்கப்பட்டது. ஆயினும் பேஷ்வா படையை கம்பெனிப் படையால் எளிதில் தோற்கடிக்க முடியவில்லை. பேஷ்வா குழுக்களின் போர் தங்களுடைய முந்தைய ஆதிக்கத்தை நிறுவுவதுதான் என்றாலும், அது அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியை விரட்டியடிக்க நடந்த கிளர்ச்சியோடு இணைந்ததுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

கடைசியாகப் போர் நடந்த இடம் பீமா கோரிகாவுன் என்ற கிராமம். கம்பெனி ஆட்களைத் தடுக்க பேஷ்வா படையினர் ஊருக்குத் தீ வைத்தனர். அதில் பல வீடுகள் எரிந்துபோய், கம்பெனிப் படையாட்கள் கருகிக்கிடந்ததைப் பிறகு வந்த அதிகாரிகள் பதிவு செய்தனர். பேஷ்வா படையினரும் கொல்லப்பட்டார்கள். பலர் பின்வாங்கி ஓடினார்கள். கிராமத்தை கம்பெனிப் படை மீட்டது.

கம்பெனிப் படையில் நூற்றுக்கு மேற்பட்ட மஹர் சமூக இளைஞர்களும் இருந்தார்கள். காலங்காலமாகத் தங்கள் சமூகம் அவமதிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வந்திருக்கிற சினத்தோடும், பிரிட்டிஷ் ஆட்சியில் தங்களுக்கு சமநிலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும் படையில் இணைந்த தலித் மக்கள் அவர்கள். குறிப்பாக பிராமணர்கள் அதிகமாகவும், மேல் சாதி என்று சொல்லிக்கொள்ளும் இதர பிரிவுகளைச் சேர்ந்தோர் ஓரளவுக்கும் இருந்த பேஷ்வா குழுக்களில் சில தலித்துகளும் இருந்தார்கள் – ஆயினும் படையில் மற்ற சாதியினருக்கு சமமாக நடத்தப்படவில்லை என்ற வேதனையும் அவர்களுக்கு இருந்தது.

கம்பெனிப் படையில் தாங்கள் படை வீரருக்குரிய மதிப்புடன் நடத்தப்பட்டதான எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.

அந்தச் சண்டையில் உயிரிழந்த தங்கள் இளைஞர்களை வரலாற்று நாயகர்களாகப் போற்றுகிறார்கள் தலித் மக்கள். 1818 ஜனவரி 1ல் நடந்தது பீமா கோரிகாவுன் சண்டை. கம்பெனி ஆட்சியாளர்கள் அங்கே ஒரு வெற்றித் தூணை நிறுவினர்.

1927 ஜனவரி 1ல் அந்த கிராமத்திற்கு வந்து, மஹர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றார் அம்பேத்கர். 1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகு அந்த வெற்றித் தூண், சாதிய ஆதிக்கத்துக்கு எதிரான தலித் எழுச்சி அடையாளமாகக் கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி 1ல் அங்கே தலித் மக்களின் சம நீதிக்காகச் செயல்படுவோரும் போராடுவோரும் கூடுகிறார்கள், அஞ்சலி செலுத்துகிறார்கள், சமத்துவத்தை நிலைநாட்ட உறுதியேற்றுத் திரும்புகிறார்கள்.

இந்த 2018 ஜனவரி 1 அன்றும் கூடினார்கள். ஆனால், திடீரென அங்கே வந்த, தங்களை இந்துத்துவா படை என்று சொல்லிக்கொள்கிற, பேஷ்வா படையில் ஆதிக்கம் செலுத்திய பிரிவைச் சேர்ந்தோர் உள்ளிட்ட சமூகங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள். இரு தரப்பினருக்கிடையேயும் மோதல் மூண்டது. ஒருவர் கொல்லப்பட்டுவிட்டார்.

சாதிய ஆதிக்கவாதிகளின் வன்முறையைத் தடுக்கத் தவறிய மஹாராஷ்டிரா அரசின் செயலின்மையைக் கண்டித்து மும்பை, புனே உள்பட மாநிலம் முழுவதும் கடையடைப்புப் போராட்டத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைக் குழுக்களும் தலித் அமைப்புகளும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கின்றன.

இங்கே, தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் குடிக்காடு கிராமத்தில் தலித் மக்கள் புத்தாண்டு விழா கொண்டாடியதைச் சகித்துக்கொள்ள முடியாத சாதிய ஆதிக்கவாதிகள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். வீடுகள், வண்டிகள், விழா மேடை, விளக்குகள், ஒலியமைப்புக் கருவிகள், நாற்காலிகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. தடுக்க முயன்ற மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதிய ஆண்டின் வருகைக்கான வாழ்த்துகள் எப்படிப் பொருளற்றுப் போகின்றன! புத்தாண்டுக் கொண்டாட்டம் கூட தலித் மக்களால் தீண்டப்படக்கூடாது என்பதன் பொருளென்ன? பழைய நூற்றாண்டுகளைப் போலவே இப்போதும் ஒடுங்கிக் கிடக்க வேண்டும் என்பதுதானே?

மக்களிடையே இப்படிப்பட்ட பகைமைகளும் மோதல்களும் நீடிக்கிற வரையில் தனது சுரண்டல் சுகத்தில் சின்னக் கீறலும் விழாது என்ற களிப்பில் லாப வேட்டையைத் தொடர்கிறது உள்நாட்டு/பன்னாட்டுச் சூறையாடல் கூட்டம். ஜனவரி 1 போய்விட்டது. இந்த ஜனவரி 3ல் உறுதியேற்போம் – உனா எழுச்சி எங்கும் பரவிட.

(படங்கள்: பீமா கோரிகாவுன் சண்டை நினைவுத் தூணும், குடிக்காடு மக்களின் போராட்டமும்)