சென்னை,

சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் மாணவர்கள் போராட்டத்தின்போது பின்லேடன்  படத்தை வைத்துக்கொண்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை நம்பிய தமிழக முதல்வரும் சட்டசபையில் அந்த படத்தை காட்டி, ஜல்லிக்கட்டு போராட்டம் திசை திரும்பியதால்தான் மாணவர்கள் போராட்டத்தை கலைக்க வேண்டியதாயிற்று என்று கூறினார்.

ஆனால், அந்த படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது அல்லது என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக போலீசார் தமிழக முதல்வரை ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த தவறான தகவல் சட்டசபை பதிவேட்டிலும் பதிவாகி உள்ளது.

தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் காட்டிய அந்த பின்லேடன் படத்தை வைத்திருந்தவர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்குக்கு ஆதரவாக 6 நாள்  நடந்த தொடர் போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. அதையடுத்து போராட்டக்கார்கள் ஊடே சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என காரணம் காட்டி  போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றினர்.

அதைத்தொடர்ந்து சென்னை முழுவதும் வன்முறை வெடித்தது. சமூக விரோதிகள் மற்றும் போலீசார் வன்முறையில் ஈடுபட்டு தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, குடிசைகளுக்கு தீ வைப்பது என்று வரலாறு காணாத கலவரத்தை ஏற்பட்டது. மெரினாவை ஒட்டிய பகுதிகள் கடும் சேதத்துக்கு ஆளாகியது.

இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது,  பேசிய தமிழக முதல்வர்  அமைதி யான போராட்டத்தை சமூக விரோத கும்பல் திசை திருப்பியது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலை யத்துக்கும் சமூக விரோதிகள் தீ வைத்தனர். போராட்டம் திசை மாறியதால்தான் தடியடி நடத்த வேண்டியதாகிவிட்டது.

இதற்கான ஆதாரங்கள் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளன என்று கூறி,  மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

அவர் சபையில் காட்டிய போட்டோ வில், ஒசாமா பின் லேடன் படம் ஒட்டிய ஒரு பைக்கில்,பின் சீட்டில் இருந்த ஒருவர் மோடியின் முகமூடி யும் அணிந்து இருப்பது  தெரியவந்தது.

தற்போது அது படம் ஜல்லிக்கட்டின் போது எடுக்கப்பட்டது அல்ல என்று நிரூபணமாகி உள்ளது.

இஸ்லாமியர் நடத்திய போராட்டத்தின் போது கடந்த டிசம்பர் மாதம்  முதல் வாரத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் உறுதி செய்துள்ளது.

பின்லேடன் போட்டோ பொறித்த இருசக்கர வாகனத்தில் சென்றது இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த சலாவூதீன், மாபாஷா என்பது தெரியவந்தது. சலாவூதின் சென்னை ஓட்டேரியில் கோழிக்கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

பைக்கை ஓட்டி சென்றது அவரது நண்பரான மாகாஷா. இவர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர். கடந்த டிசம்பர் மாதம் முதல்வாரத்தில்   இஸ்லாமிய பிரிவு ஒன்று நடத்திய  பா .ஜ.க. மாநில தலைமை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொள்ள  பைக்கில் சென்றோம்.

அன்றைய தினம் மெரினா கடற்கரை சாலை வழியாக பைக்கில் சென்ற போது தான் பிரதமர் மோடியின் மாஸ்க்கை அணிந்திருந்ததாகவும், இந்த போட்டோ கடந்த டிசம்பர் மாதமே சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளேன் என்று கூறுகிறார்.

மேலும் கடந்த 23ந்தேதி போராட்டத்தின்போது நான் கறிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்த தாகவும், தேவையென்றால் கடையின் சிசிடிவி காமிரா பதிவை பார்த்துக்கொள்ள லாம் என்று கூறியுள்ளார்.

போலீசார் இதுகுறித்து விசாரித்தனர். அதன்பிறகே அந்த போட்டோவுக்கும், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

சமூக விரோதிகள் யாரோ அந்த படத்தை ஜல்லிக்கட்டு போராட்ட படத்தினுடே இணைத்து போராட்டத்தை திசை திருப்ப முனைந்திருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

போலீசாரும் அந்த படத்தை காட்டியே, தாங்கள் நடத்திய  வன்முறையை  திசை திருப்பவே, இதுபோல் செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது தமிழக பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், முதல்வருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை நடைபெற்ற 23ந்தேதி அன்றுதான் பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பின்லேடன் படத்தை பதிவு செய்து, தேச விரோத சக்திகள் மாணவர்களிடையே புகுந்திருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.