சபரிமலைக்கு இருமுடி கட்ட வந்த கேரள இடதுசாரி தலைவரின் மகன்: மனமுருகி வேண்டுதல்

கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரின் மகன் பினோய் கொடியேரி, சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் வந்து தரிசனம் மேற்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி. தனியார் நிறுவனம் ஒன்றை வைத்து தொழில் நடத்தி வரும் இவர், சமீபத்தில் பீகாரை சேர்ந்த பெண்ணை கற்பழித்துவிட்டதாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் பெற்று கேரளாவில் தனது தந்தையுடனேயே வசித்து வருகிறார். இவ்வழக்கு தொடர்பான டி.என்.ஏ முடிவுகள் ஓரீரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், நேற்று திடீரென சபரிமலைக்கு இருமுடிக் கட்டுடன் வந்த பினோய் கொடியேரி, மாலை 5 மணிக்கு நடை திறந்ததும், 18ம் படி வழியாக ஐயப்பனை தரிசனம் செய்தார். பின்னர் மாளிகைப்புறம் கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர், தேவசம்போர்டு அதிகாரிகள் உடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் வரலாம் என கேரள மார்க்சிஸ்ட் அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி, பெற்ற தீர்ப்பு காரணமாக அக்கட்சி சமீபத்தில் நடந்த தேர்தலில் தோற்றது என்று கொடியேரி பாலகிருஷ்ணன் சமீப நாட்களாக கூறிவந்த நிலையில், தன் மீதான வழக்கின் பிடியும் இறுகி வருவதால், ஐயப்பனை தரிசிக்க கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் வந்ததாகவும், மனம் உருகி அவர் வேண்டியதாகவும் தேவசம்போர்டு அதிகாரிகள் விளக்கமும் அளித்துள்ளனர்.