திருவான்மியூர் கடற்கரையில் நீல ஒளிர்வு அலைகள் – பருவநிலை மாற்றத்தின் அறிகுறி?

சென்னை: திருவான்மியூர் கடற்கரையில் காற்று வாங்கிய மக்களுக்கு ஒரு அரிய அழகிய காட்சி கிடைத்தது. கடலில் தென்பட்ட நீல ஒளிர்வு அலைகளை அவர்கள் கண்டு ரசித்தார்கள்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நீல ஒளிர்வு அலைகள் என்பவை சென்னையின் கடற்கரைகளில் அபூர்வமாக தென்படும் அம்சங்களாகும். நீல ஒளிர்வு அலைகள் தென்பட்டவுடன், அவை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

நாக்டிலுகா சின்டிலன்ஸ் என்ற ஒருவகை பைட்டோபிளாங்டன் தனது ரசாயன ஆற்றலை ஒளி ஆற்றலாக மாற்றுவதால் இத்தகைய நீல ஒளிர்வு ஏற்படுகிறது. அவை, கரையை நோக்கி அடித்து வரப்படும்போது இத்தகைய சம்பவம் நிகழ்கிறது.

கடலிலுள்ள பாக்டீரியா, ஜெல்லி மீன், புழுக்கள், கடல் நட்சத்திரம், மீன் மற்றும் சுரா ஆகிய பல கடல்வாழ் உயிரினங்களில் இந்த உயிரி காணப்படுகிறது.

இந்த நீல ஒளிர்வு என்பது பருவநிலை மாற்றத்தின் ஒரு சிக்னல் என்றும், இதன்மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் தாக்கம் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.