சென்னை.

னைத்து அரசு மருத்துவமனைகளில் குழந்தை திருட்டை தடுக்கும் வகையில் விரைவில் பயோ மெட்ரிக்  பதிவு அமல்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

நேற்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நுழைவாயில் மற்றும் ரூ.1.3 கோடி மதிப்பில் சிறப்பு அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை திற்நது வைத்து சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இதற்கு முன் 837 படுக்கைகள் இருந்தது. தற்போது அங்கு கூடுதலாக 40 படுக்கைகள் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் பிறந்து 28 நாட்கள் ஆன குழந்தை களுக்கான பிறவி குறைபாடுகள் மற்றும் இதர அறுவை சிகிச்சை செய்வதற்காக சிறப்பு ஆபரேஷன் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டை தடுப்பதற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பயோ மெட்ரிக்’ முறை வசதி தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் விரைவில் கொண்டு வரப்படும்.

இதன் மூலம் தாயின் விரல் ரேகை வைத்தால் மட்டுமே குழந்தைகள் இருக்கும் பெட்டி திறக்கும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வரப்படும் என மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளார்

இவ்வாறு அவர் கூறினார்.