புதுடெல்லி: இந்திய – சீன எல்லைப் பிரச்சினை தொடர்பான அழுத்தங்கள் இன்னும் விலகாத நிலையில், சீன நிறுவனம் தயாரித்த எலக்ட்ரிக் வாகனத்தின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வ‍ைத்துள்ளார் இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்.

சீனாவின் ஷாங்காயைச் சேர்ந்த எஸ்ஏஐசி மோட்டார் என்ற நிறுவனத்தினுடையதாகும் இந்த எம்ஜி மோட்டார். டெல்லி – ஆக்ரா இடையே இந்த சோதனை ஓட்டம் நவம்பர் 25ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிபின் ராவத்துடன் சேர்ந்து கொடியசைத்து துவக்கி வைத்தவர் பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் மீனாக்ஷி லெகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன எல்லையில், பல இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், தலைமை ராணுவ தளபதியே சீன நிறுவனம் தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதானது பல கேள்விகளையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.

தற்போதைக்கு, ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த சீன நிறுவனம் விலகியுள்ள நிலையில், பல சீன செயலிகள் தடைசெய்யப்பட்ட நிலையில், ராணுவ தலைமை தளபதியின் இந்த செயல்பாடு கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.