பக்கோடாக் கடை வைக்கச் சொன்ன பிரதமரும் பீடாக்கடை வைக்கச் சொல்லும் முதல்வரும்

கர்தலா

வேலை அற்ற இளைஞர்களை பக்கோடா கடை வைக்கச் சொன்ன மோடியின் வழியில் திரிபுரா முதல்வர் பீடாக்கடை வைக்கச் சொல்லி இருக்கிறார்.

திரிபுரா கால்நடை மருத்துவக் கழகம் நேற்று அகர்தலாவில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது.   உலக கால்நடை மருத்துவ தினத்தை ஒட்டி பிரக்ஞா பவனில் இந்த நிகழ்வு நடந்தது.   இந்த நிகழ்வில் திரிபுராவின் முதல்வர் பிப்லாப் தேப் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முதல்வர் பிப்லாப் தேப் தனது உரையில், ”நாட்டில் படித்த பல இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லை எனவும் அரசு தங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.   தற்போது பிரதமர் மோடியின் அரசு வேலையற்ற இளைஞர்களுக்காக பல தொழில் கடன் திட்டங்களை வங்கிகள் மூலம் அளித்து வருகிறது.   எனவே இளைஞர்கள் இந்த உதவியை பயன்படுத்திக் கொண்டு ரூ.75000 கடன் வாங்கி ஒரு பீடாக்கடை ஆரம்பிக்கலாம்.

பீடாக்கடை ஆரம்பிப்பது, விவசாயம் செய்வது,  மாட்டுபண்ணை மற்றும் கோழிப்பண்ணை அமைப்பது போன்றவைகள் கேவலமானவை என கூறுவது குறுகிய மனப்பான்மை ஆகும்.    ரூ.75000 முதலில் ஆரம்பிக்கும் பீடாக்கடையினால் மாதந்தோறும் ரூ.25000 வருமானம் கிடைக்கும்.    சுயமாக உழைத்து முன்னேறுவதற்கு இவைகள் எல்லாம் நல்ல வழிகளே.   இளைஞர்கள் அரசை தொந்தரவு செய்வதை விட சுயமாக முன்னேற சிந்திக்க வேண்டும்”  எனக் கூறி உள்ளனர்.

திரிபுராவின் இளைஞர்கள் முதல்வரின் இந்த பேச்சினால் அதிருப்தி அடைந்துள்ளனர்.  வேலை வாய்ப்பை தேடும் இளைஞர் ஒருவர், “பாஜகவின் பிரதமர் பக்கோடாக் கடை வைக்கச் சொன்னார்.  அவர் வழியில் எங்கள் மாநில பாஜக முதல்வர் பீடாக்கடை வைக்கச் சொல்கிறார்’  என வருத்தத்துடன் கூறினார்.