மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், கடந்த ஞாயிறன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று கோப்பையை வென்றது. இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஒருபக்கம் எல்லோராலும் கொண்டாடப்பட்டாலும் இன்னொரு புறம் இந்திய வீரர் பிரேந்திர லக்ராவின் நேர்மையான செயல் ஒன்று அனைவரையும் ஈர்த்துவிட்டது.

india_hocky

இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தப் போட்டியில் ஆடினாலும் அனல் பறக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதுவும் இது இறுதிப் போட்டியாதலால் இரு நாட்டு வீரர்களும் தங்கள் உயிரைக் கொடுத்து ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா முன்னிலை பெற்றிருந்த நிலையில் இன்னும் 15% விளையாட்டே பாக்கியிருக்க. பாக்.வீரர் பிலால் பந்தைப் பெற்று அதை தன் நாட்டு வீரர்கள் இருவரிடம் அடித்து தள்ள அது தற்செயலாக இந்திய வீரர் லக்ராவின் கால்களில் பட்டு லாங் கார்னருக்கு சென்றது. உடனே பாகிஸ்தான் வீரர்கள் நடுவரிடம் பெனால்டி கார்னர் தரும்படி கோரினர்.
உடனே நடுவர் விசிலடித்து ஆட்டத்தை நிறுத்தினார். ஆனால் அவருக்கு அது லக்ராவின் கால்களில் பட்டதா என்று தெளிவாக தெரியவில்லை. எனவே அவர் ரெவ்யூ அம்பையரிடம் கேட்க முற்பட யாரும் எதிர்பாராத வகையில் லக்ரா இது என் காலில்தான் பட்டது. இது பெனால்டி கார்னர்தான் என்று சைகையில் சொல்ல அவரது நேர்மையைக் கண்டு அனைவரும் ஒருகணம் அசந்துவிட்டனர்.
அடுத்து எட்டு நிமிடங்களே இருந்த அந்த ஆட்டத்தில் ஒருவேளை பாகிஸ்தான் இந்தியாவின் வெற்றிவாய்ப்பை எளிதாக பறித்திருந்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் தனக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியதால் இந்தியா வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கோச் கே.எம்.ஜுனாயிட் ஓடி வந்த் லக்ராவை ஆரத் தழுவிக்கொண்டு அவரது நேர்மைக்காக நன்றி சொன்னார். ஒவ்வொரு பாகிஸ்தான் வீரரும் வந்து லக்ராவுக்கு நன்றி சொன்னது அனைவரையும் நெகிழ வைத்தது. இரு நாடுகளுக்கும் உள்ள பகை நெருப்பாக கனன்றுவரும் இவ்வேளையில் இது போன்ற செயல்கள் இரு நாட்டினரில் உள்ளத்திலும் ஈரத்தையும் நட்பையும் சுரக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.