மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சரிவர செயல்படாத பிர்ஹான் மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்வேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் அதிக கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 694 பேர் பலியாகியுள்ளனர்.
மராட்டியத் தலைநகர் மும்பையில் அதிக பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா தொற்று, சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய குழு ஆய்வு செய்தது. இதில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாத பிர்ஹான் மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்வேஷ் மீது புகார் எழுந்தது.
இந்தப் புகார்கள் எழுந்ததையடுத்து, அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, ஊரக மேம்பாட்டுத்துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி இக்பால் சிங் சஹால், பிர்ஹான் மும்பை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், கடந்த மே மாதம் 4ம் தேதி அம்மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவில், மாநிலத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மாநகர கமிஷனர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.