மும்பை: இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகள் பட்டியலில் பிரியாணியே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்தியது பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி. அந்த நிறுவனம் ஆண்டுதோறும் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிடும். அந்தவகையில் இந்தாண்டும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனம் செயல்படும் 500 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, பிரியாணிதான் டாப் இடத்தில் உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்கிறார்களாம்! ஒரு நொடிக்கு சராசரியாக 1.6 பேர்.

கடந்த 3 ஆண்டுகளாக பிரியாணி தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. முகலாயர் காலத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதாக நம்பப்படும் பிரியாணிக்கு, எப்போதுமே மாமிசப் பிரியர்களுக்கு ஒரு தனி மவுசுதான்!

பிரியாணிக்கு அடுத்த இரண்டாவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்ற உணவு அயிட்டம் கிச்சடி. முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிச்சடி ஆர்டர் செய்வோர் எண்ணிக்கை 128% அதிகரித்துள்ளது. மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது பீட்சா.

இனிப்பு வகைகளைப் பொறுத்தவரை, குலோப் ஜாமூன், பருப்பு ஹல்வா போன்றவை மக்களை மிகவும் கவர்ந்தவயைாக உள்ளனவாம்.