சென்னை: வெங்காய விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஹோட்டல்களில் சில உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது.

அதில் முக்கியமானது பிரியாணியும் ஆம்லேட்டும். சிலபல உணவகங்களில் வெங்காயம் இல்லாமல் ஆம்லேட் போடப்படுகிறது.

பிரியாணியைப் பொறுத்தவரை, நடுத்தர ஹோட்டல்களில் அதன்விலை ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், நட்சத்திர ஹோட்டல்களில் ரூ.50 முதல் ரூ.100 வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், சென்னையின் நடுத்தர ஓட்டல்களில் சிக்கன் பிரியாணி ரூ.200க்கும், மட்டன் பிரியாணி ரூ.250க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சாதாரண ஹோட்டல்களில், ரூ.130 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. ஹோட்டல் உணவுகளையே பெரிதும் நம்பியிருக்கும் வெளியூர் வேலைக்காரர்கள் இதனால் கவலையடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், வெங்காய விலை இறங்கியவுடன், ஏற்றிய பிரியாணியின் விலையை மீண்டும் பழையபடி குறைப்பார்களா? அல்லது அப்படியே வைத்து மக்களின் வயிற்றில் அடிப்பார்களா ஹோட்டல்காரர்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.