சென்னை

னி தமிழகம் முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். இதைப் பெற அரசு அலுவலகங்களில் நாள் முழுவதும் வரிசையில் காத்து நிற்கும் நிலை இருந்தது. அது மட்டுமின்றி பதிவு செய்ய ஒரு வரிசை மற்றும் பதிந்த பிறகு அலுவலகத்தில் குறிப்பிடும் நாட்களில் வந்து சான்றிதழ் பெற ஒரு வரிசை என மக்களுக்கு நேரம் மிகவும் வீணானது.

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமூக பதிவு இணையதளத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர், “இனி பிறப்பு மற்றும் இறப்பு உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் மக்கள் இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே தமிழகத்தில் இந்த முரை முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

பிறப்பு மற்றும் இறப்புக்களில் சுமார் 99.5% மருத்துவமனைக்ளில் நடைபெறுகிறது. ஆகவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அவற்றை 21 நாட்களுக்குள் பதிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கருவுறும் பெண்களும் அரசிடம் அதை பதிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட அடையாள எண் அளிக்கப்பட உள்ளது. அந்த எண்ணின் மூலம் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது இந்த சான்றிதழ்களில் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்துக்களும் கியூ ஆர் அடையாளமும் உள்ளது. இனி அவற்றில் டிஜிட்டல் அடையாளம் இருக்கும். அத்துடன் இந்த சான்றிதழ்களில் இணைய தளம் மூலம் விவரங்களை 12 மாதத்துக்குள் எவ்வித கட்டணமும் இன்றி திருத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே இந்த முறை சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் உள்ளது. அதைப் போலவே தற்போது மாநிலம் எங்கும் இந்த முறை அறிமுகபடுத்தப்பட்டுளது. கடந்த 2018 ஆம் வருடம் தமிழக அரசு 9.2 லட்சம் பிறப்புக்களையும் 5.3 லட்சம் இறப்புக்களையும் பதிந்துள்ளது