கொரோனா சிகிச்சை மையத்தில் மது விருந்துடன் பிறந்த நாள் விழா..

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள தனியாருக்குச் சொந்தமான  ஓட்டல் ஒன்று, கொரோனா பாதித்த டாக்டர்கள் மற்றும் போலீசார் சிகிச்சை பெறுதற்கான மையமாகச் செயல் பட்டு வந்தது.

அந்த ஓட்டலில் மொத்தமுள்ள 32 அறைகளில் 25 அறைகளைத் தானே மாநகராட்சி, கொரோனா மையமாக மாற்றி இருந்தது.

எஞ்சிய 7 அறைகளை விநாயக் காவந்த் என்பவர், அண்மையில்  தன் பெயரில் பதிவு செய்து நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவை அங்கு நடத்தியுள்ளார்.

மது விருந்து, டான்ஸ் என அமர்க்களப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ’’ஹுக்கா’’ புகையுடன் கொரோனா விதிகளும் காற்றில் பறந்துள்ளன.

யாரும் ’’மாஸ்க்’’ அணியவில்லை. தனி நபர் இடைவெளியும் கிடையாது.

கொரோனா மையத்தில் நிகழ்ந்த இந்த கொண்டாட்டம், வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக  வலைத்தளங்களிலும் ’’ரிலீஸ்’’ செய்யப்பட-

அதிர்ந்து போன போலீசார் அந்த ஓட்டலுக்கு ஓடிச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

மது விருந்துக்கு ஏற்பாடு செய்த விநாயக் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ், கோரத்தாண்டவம் ஆடும் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தக்கூத்து நடந்திருப்பது அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.