சென்னை,

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ந்தேதி வருகிறது. அன்று அவரை நேரில் பார்க்க வருவதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும், பிறந்த நாளில் அவரை பார்க்க வராமல் இருந்தால் அதுவே அவருக்கு அளிக்கும் பரிசு என்றும் கூறி உள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

80 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஓய்வின்றி தமிழ் இனத்திற்காக உழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தற்போது உடல்நலம் தேறி வருகிறது.

இந்நிலையில் அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதோடு நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் கருணாநிதியை சந்திக்க அவரது பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம்.

கருணாநிதியின் உடல்நலம் தேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

தலைவர் பிறந்தநாளில் அவரை சந்திக்காமல் தவிர்ப்பதே தொண்டர்கள் அளிக்கும் சிறப்பு பரிசு.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டு திமுக தலைவர்  பிறந்தநாளன்று  வீட்டு வாசலில் மரக்கன்று நடுவதும், அவரிடம் ஆசி பெறும் தொண்டர்களுக்கு புதிய 10 ரூபாய் நோட்டுகளை பரிசாக அளிப்பதும் குறிப்பிடத்தக்கது.