ஓடிடி வெளியீட்டு முயற்சியில் சந்தானத்தின் ‘பிஸ்கோத்’….!

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘பிஸ்கோத்’.

தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக நடித்துள்ளார். இது அவருக்கு 400-வது படம்.

கொரோனா ஊரடங்கினால் இதன் இறுதிக்கட்டப் பணிகள் பாதித்தது. தற்போது தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. முழுக்க காமெடி பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது, இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைத் தயாரிப்பாளர் ரவீந்திரன் கைப்பற்றியுள்ளார். திரையரங்குகள் திறக்க நாட்களாகும் என்பதால், ஓடிடி தளங்களில் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

ரவீந்திரன் நினைக்கும் தொகையை, ஏதேனும் ஓடிடி தளம் கொடுக்க முன்வரும்போது ‘பிஸ்கோத்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.