இளம் டென்னிஸ் நட்சத்திரம் பியான்காவின் லட்சியம் என்ன?

வான்கூவர்: ‘நம்பர் 1’ வீராங்கனை என்பதுதான் எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார் இளம் கனடிய டென்னிஸ் நட்சத்திரம் பியான்கா. இவருக்கு வயது 19.

இவர் கடந்தாண்டு யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தற்போது கொரோனா காரணமாக அனைத்து விளையாட்டுகளும் முடங்கியுள்ள இந்த சூழலில் அவர் கூறியுள்ளதாவது,

“டொரான்டோவைப் பொறுத்தவரை சூழ்நிலை மிகவும் கடினமாகத்தான் உள்ளது. விளையாட்டுக்கள் எதுவுமில்லை. பூங்காக்கள் பூட்டிக் கிடக்கின்றன. முடிந்தவரை, மனதளவில் சீராக இருக்க முயல்கிறேன்.

மனம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. யுஎஸ் ஓபன் தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்து அடுத்தவாரம் முடிவு செய்யப்படவுள்ளது. தோல்வி என்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. எனவே, என்னால இயன்றவரை சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.

உலகின் நம்பர் 1 வீராங்கனையாக மிளிர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்று கண்களில் ஆர்வம் மின்ன தெரிவித்தார் பியான்கா. அவர், தற்போது உலகின் 6வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.