Random image

பாராளுமன்ற தேர்தல் முன் கூட்டி நடந்தால் மாநில தேர்தலையும் நடத்தலாம் : பிஜு ஜனதா தளம்

புவனேஸ்வர்

பாராளுமன்ற தேர்தலை முன் கூட்டி நடத்தினால் மாநில தேர்தலையும் முன் கூட்டி நடத்த அரசு தயாராக உள்ளதாக பிஜு ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வரும் 2019 ஆம் ஆண்டு  மே அல்லது ஜுன் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டி உள்ளது.   இந்நிலையில் மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற தேர்தலை முன் கூட்டியே நடத்த விரும்புவதாக தகவல்கள் வருகின்றன.   மத்திய தேர்தல் ஆணையம் இந்த வருட இறுதியில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரிசா சட்டப்பேரவையின் ஆயுட்காலமும் அதே காலகட்டத்தில் நிறைவு பெறுகிறது.  இந்நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையரை சந்தித்தனர்.    அப்போது முன் கூட்டியே தேர்தல் நடத்துவது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.   சந்திப்பு முடிந்த பிறகு பிஜு ஜனதா தள பாராளுமன்ற உறுப்பினர் பூரி பினாகி மிஸ்ரா செய்தியாள்ர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “மத்திய அரசு கூறியபடி சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்தும் போது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவு குறைய வாய்ப்புள்ளது.  எனவே பாராளுமன்ற தேர்தலை முன் கூட்டி நடத்துவதாக இருந்தால் அந்த தேர்தலுடன் ஒரிசா மாநில தேர்தலையும் முன் கூட்டி நடத்த அரசு ஒப்புதல் அளிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.