பாஜக வழக்கறிஞர் ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் : முழு விவரம் இதோ

கோவை

சென்னையை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளதன் முழு விவரம் தற்போது வந்துள்ளது.

இந்த செய்தியை நமது பத்திரிகை .காம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது தெரிந்ததே

ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வக்கீல் கைது

சென்னை பெசண்ட் நகரை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்.   இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளதாக சொல்லப்படுகிறது   கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் இவர் பாஜக வேட்பாளராக போட்டி இட்டுள்ளார்.    இவர் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் கோவை ரெயில் நிலையத்தில் நள்ளிரவு சுமார் 1 மணிக்கு ரெயில் ஏறி உள்ளார்.

அந்த வண்டியில் ஒரு ஒன்பது வயது சிறுமி தனது குடும்பத்துடன் பயணம் செய்துக் கொண்டு இருந்தார்.   அந்த சிறுமி நடு பெர்த்தில் படுத்திருந்துள்ளார்.  அவருடைய தாயும் சகோதரரும் கீழ் பெர்த்திலும் தந்தை மேல் பெர்த்திலும் படுத்திருந்துள்ளனர்.   உள்ளே நுழைந்த பிரேம் ஆனந்த் இந்த சிறுமியின் குடும்பம் பயணம் செய்த இருக்கைக்கு அருகே வந்துள்ளார்.   அந்தச் சிறுமியின் தாய் படுத்திருந்த இடத்துக்கு எதிரில் இருந்த பெர்த் காலியாக இருந்துள்ளது.

அவர் டிக்கட் பரிசோதகரிடம் பணம் கொடுத்து விட்டு அந்த பெர்த்தை பெற்றுள்ளார்.  ஆனால் தனது பெர்த்தில் படுக்காமல் இந்த சிறுமியின் கன்னத்தில் முத்தம் இட்டபடி  மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.    அந்தச் சிறுமி தூக்கத்தில் இருந்து விழித்து கூச்சலிடத் தொடங்கி உள்ளார்.  உடனே அந்தச் சிறுமியின் குடும்பத்தினரும் மற்ற பயணிகளும் விழித்து பிரேம் ஆனந்தை பிடித்துள்ளனர்.

அப்போது ரெயில் கோவைக்கும் ஈரோட்டுக்கும் இடையில்  சென்றுக் கொண்டிருந்ததால் பயணிகள் அவரை ஒரு ஓரமாக அமர வைத்துள்ளனர்.      அவர் அந்தச் சிறுமியையும் மற்ற பயணிகளையும் தாம் அரசியலில் ஒரு பெரும் புள்ளி எனவும்  புகழ் பெற்ற வழக்கறிஞர் எனவும் மிரட்டி உள்ளார்.   ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத மற்ற பயணிகளால் அடுத்த ரெயில் நிலையத்தில் அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.

குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈட்பட்டதாக ஈரோடு ரெயில்வே காவல்துறை இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.   காவல்துறை அதிகாரி,  “குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப் பெண்ணை தொட்டு இருக்கிறார்.   அவ்வளவு தான்.  அதனால் அவர் எங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.   அவர் ஒரு வழக்கறிஞர் அடையாள அட்டையை வைத்துள்ளார்.   ஆனால் அவருக்கும் பாஜகவுக்கும் சம்மந்தம் உள்ளதா என்பது சரிவரத் தெரியவில்லை.”  எனக் கூறி உள்ளார்.

இது குறித்து சென்னை வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த ஒருவர், “அந்த சிறுமியிடம் அவர் தகாத முறையில் நடந்துக் கொண்டது பற்றி சரிவர தெரியவில்லை.   ஆனால் அவர் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்,   இதை தேர்தல் ஆணைய இணைய தளத்தை பார்த்தால் தெரிந்து விடும்.   மேலும் அவர் ஒரு துணிக்கடை வைத்திருந்தார்.    வழக்கறிஞராக தொழில் புரியவில்லை”  எனக் கூறி உள்ளார்.

பிரேம் ஆனந்த் ஏற்கனவே நடிகர் சந்தானம் மிரட்டப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.