டில்லி

பாஜகவின் விவசாய அணித் தலைவர்கள் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை பாஜகவினர் காலிஸ்தானியர் என வர்ணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாஜக நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடந்து வருகிறது.  குறிப்பாக டில்லி எல்லையில் குஜராத் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் பாஜக அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் உள்ளதால் போராட்டம் தொடர்கிறது.

பாஜக தலைவர்கள் பலர் போராடும் விவசாயிகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  அவர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் இடதுசாரி தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் நேற்று முன் தினம் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பீகாரில் இவர்களை பாஜகவின் வழக்கமான விமர்சனமான ”துக்டே துக்டே காங்க்” (சின்னஞ்சிறு பயங்கரவாத குழுக்கள்) என அழைத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக விவசாயிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுர்ஜித் சிங் ஞானி, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பல பாஜக தலைவர்கள், காலிஸ்தான் தீவிரவாதிகள், இடதுசாரி தீவிரவாத ஆதரவாளர்கள் மற்றும் துக்டே துக்டே காங் என விமர்சிக்கின்றனர்.  இது போன்ற விமர்சனங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.   இதன் மூலம் தற்போதைய பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

நாம் போராடும் விவசாயிகளின் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.  போராடும் விவசாயிகள் நமது சகோதர சகோதரிகள் ஆவார்கள்.  அவர்களை இவ்வாறு சொல்வது ஆரோக்கியமான நடவடிக்கை இல்லை.   இவ்வாறான சொற்களால் விமர்சிப்பது நமது கட்சியின் மதிப்புக்குச் சற்றும் ஏற்றது இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தைப் பஞ்சாப் மாநில விவசாயத் தலைவரும் சட்ட அமைப்புக் குழுவினருமான சுகிந்தர் காரேவால், “ஒரு புறம் நாம் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே மற்றொரு புறம் அவர்களை காலிஸ்தான் என விமர்சிப்பது எவ்விதத்திலும் உதவி செய்யாது.

 போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம்  மற்ற மாநில விவசாயிகள் இரக்கத்துடன் உள்ளனர்.   எனவே ஒரு சிலர் இந்த இயக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். ஆனால் நாம் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே தவிர உண்மையான விவசாயியிடம் கடுமையாக நடந்துக் கொள்ள கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முந்தைய சிவராஜ் சிங் சவுகான அரசில் வேளாண் அமைச்சராகப் பதவி வகித்த கவுர் சங்கர் பைசன் என்பவரும் பாஜக தலைவர்களின் போக்கைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கவில்லை எனினும் அவர்கள் மோடி ஒரு நல்ல முடிவை அளிப்பார் என நம்புகின்றனர் எனவும் இந்த சொற்கள் அவர்களையும் திசை திருப்பலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.