பீகார் தொகுதி பங்கீடு அதிருப்தி : சரத் பவாரை சந்தித்த பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்

டில்லி

பீகார் பாஜக கூட்டணித் தலைவர் தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துள்ளார்.

பீகார் மாநிலக் கட்சியான ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி பாஜகவின் கூட்டணியில் உள்ளது. அந்த கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாகாவுக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் இடையே வெகு நாட்களாக அரசியல் பிணக்கு இருந்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தையின் போது பாஜகவும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் ஒரே எண்ணிக்கை தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் மற்ற கூட்டணிக் கட்சிகள் மிகவும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக ராஷ்டிய லோக் சம்தா கட்சி இந்த தொகுதிப் பங்கீட்டால் தங்களுக்கு வர வேண்டிய தொகுதிகளின் என்ணிக்கை குறைந்து விடும் எனவும் இதை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கவனித்து சீர் செய்ய வேண்டும் என கூரி உள்ளது.

மேலும் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் தனது கட்சிக்கு பல காலமாக அநீதி இழைத்து வருவதாகவும் அதை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சரி செய்வார் என நம்புவதாகவும் அக்கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று தேசிய காங்கிரஸ் தலைவரான சரத் பவாரை திடீரென உபேந்திர குஷ்வாகா சந்தித்துள்ளார். சரத் பவார் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது இருவரும் பீகார் மாநில அரசியல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. உபேந்திரா இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறி உள்ளார்.

தொகுதி பங்கீடு குறித்து அதிருப்திய தெரிவித்த பாஜக கூட்டணி தலைவர் எதிரணி தலைவரை சென்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.