குடியரசுத்தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்துக்கு சிவசேனா ஆதரவு

ராம்நாத் கோவிந்த்

மும்பை:

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

 

குடியரசு தலைவராக  இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அடுத்த மாதம் 17-ம்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் அறிவித்த உடனேயே  பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ‘‘தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமே ஒருவரை நீங்கள் (பா.ஜ.க.) வேட்பாளராக நிறுத்தினால் அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதாவது நீங்கள் வாக்கு வங்கி மீது உங்கள் கவனம் உள்ளது. குடியரசுத்தலைவர் வேட்பாளர்  என்பவர் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலன்கள் சார்ந்தவராக இருக்க வேண்டும்’’ என்றார்.

பா.ஜனதாக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான சிவசேனாவின் எதிர்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே இன்றும் தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலேசனைக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்ரே  ‘‘எங்கள் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம். எங்களது ஆதரவிற்குப் பிறகு, அவரை தேர்வு செய்வதற்கு எந்த பிரச்சினையும் இருக்காது’’ என்று தெரிவித்தார்.