லக்னோ:

சங் பரிவார் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கும் 150க்கு மேற்பட்ட சர்வதேச நன்கொடையாளர்களின் கூட்டம் கடந்த வாரம் டெல்லி மற்றும் லக்னோவில் நடந்தது. இந்த கூட்டத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட மத்திய, மாநில அரசுகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியோடு மேல்மட்டத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலர் நல்ல நட்புடன் இரு க்கின்றனர். அவர்கள் அமித்ஷா மற்றும் உ.பி முதல்வர் ஆதித்யாநாத் ஆகியோரை நேரில் சந்தித்து அயே £த்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தை பார்வையிட்டு விரைந்து கட்டுமான பணியை தொடங்குமாறு வலியுறுத்திச் சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘‘22 நாடுகளில் இருந்து 150க்கும் மேற்பட்டவர்கள் இந்த குழுவில் வந்திருந்தனர். இதில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் இருந்தனர்’’ என்று விஹெச்பி செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்தார்.

‘‘வந்திருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தேவையான நிதியை வழங்குகிறோம். ஆனால், இடையூறுகளை அகற்றிவிட்டு ராமர் கோவில் கட்டுமான பணியை வரும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்’’ என்று பன்சால் தெரிவித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜ ஆட்சியில் இருந்தும் ஏன் கட்ட முடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘‘அயோத்தியா சலோ’’ என பெயரிடப்பட்ட இந்த பயணம் கடைசி நிமிடத்தில் முடிவு செய்யப்பட்டதாகும். கடந்த 4ம் தேதி இந்த விருந்தாளிகள் அனைவரையும் விஹெச்பி அமைப்பினர் வரவேற்று டெல்லியில் ஆர்கே புரத்தில் உள்ள அலுவலகத்தில் மதிய விருந்தும் அளித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் விஹெச்பி தலைவர் ராகவ ரெட்டி, செயலாளர் சம்பத்ராய் ஆகியோர் கலந்து கொண் டுள்ளனர். அன்று மாலை பாஜ தலைவர் அமித்ஷா சார்பில கட்சி அலுவலகத்தில் வரவேற்பு அளி க்கப்பட்டது. ‘‘ ராமர் கோவில் கட்டுவதற்கு உள்ள இடையூறுகள் அனைத்தையும் அகற்றுவதற்கு ஏற்ப அரசு பணியாற்றி வருகிறது. இதன் பிறகு கட்டுமான பணி விரைவுபடுத்தப்படும்’’ என்று அமித்ஷா உறுதி அளித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கையை பிரதமர் மோடி சார்பில் அமித்ஷா குழுவினரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். மேலும், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவுக்காக அரசு காத்திருக்காமல் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் ராமர் கோவில் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்’’ என்று அவர்கள் வலியுறுத்தியதாக பாஜ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அன்றிரவு ஹயாத் ரிஜென்சி ஓட்டலில் தங்கிய அவர்கள் 6ம் தேதி லக்னோவுக்கு விமானத்தில் செல்லப்பட்டனர். அங்கிருந்து ஏசி பேருந்தில் அயோத்திக்கு சென்றனர். அங்கு பிரச்னைக்குறிய இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். கரசேவகபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கற்சிற்ப பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

அவர்களுக்கு கட்டுமான பணிகள் ஏற்பாடுகள் குறித்து விஹெச்பி அமைப்பினர் விளக்க கூறினர். அன்று மதியம் முதல்வர் ஆதித்யாநாத் வீட்டில் அவர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. அமித்ஷா போல் ஆதித்யாநாத்தும் ராமர் கோவில் கட்டுவதற்கு உள்ள இடையூறுகள் அகற்றப்படும் என்று அவர்களிடம் உறுதியளித்தார்.

460 ஆண்டுகள் பழமையான அந்த மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி சங் பரிவார் அமைப்புகளால் இடிக்கப்பட்டது. ராமர் பிறந்த இடத்தில் அந்த மசூதி இருந்ததாக குற்றம்சாட்டினர்.