பெங்களூரு

ர்நாடக மாநில சட்டசபை தேர்தலை விடுமுறை நாளான இரண்டாம் சனிக்கிழமை நடத்துவதால் வாக்களிப்போர் எண்ணிக்கை குறையும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் 27 ஆம் தேதியன்று மத்திய தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது.   அதன்படி வாக்களிப்பு வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 15ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த 2013 ஆம் வருடத் தேர்தல் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.    ஆனால் தற்போது மே மாதம் 2ஆம் வாரம் மாநிலத்தில் கோடை உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் வாமனாச்சார்யா செய்தியாளர்களிடம், “இரண்டாவது சனிக்கிழமையான மே 12 அன்று வாக்களிப்பு தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் பல தனியார் நிறுவனங்களுக்கு அன்று விடுமுறை தினமாகும்.   அடுத்த நாள் ஞாயிறு அன்று வார விடுமுறை என்பதால் பலரும் விடுமுறையைக் கழிக்க வெளியூர் சென்று விடுவது வழக்கம்.

இதனால் வாக்களிப்பு மிகக் குறைவான அளவிலே பதிவாகும் என தோன்றுகிறது.   அதனால் வார நாட்களில் வாக்களிப்பு தினம் வருமாறு மாற்றி அமைக்கப்பட்டால் வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்.   குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் வாக்களிப்போர் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு அதிகமாகும். ”  என தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரசும் தெரிவித்துள்ளது.   மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சந்திரசேகர், “வாக்களிப்பு தினத்தை சனிக்கிழமையில் அமைத்தது தவறானது.   பல இளைஞர்கள் வார இறுதி நாட்களை வெளியூரில் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.   அவர்கள் வெளியூர் போகாமல் நகரிலேயே இருந்து வாக்களிக்க வருவார்களா என்பது சந்தேகத்துக்குரியது”  எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையர், “வாக்களிப்பு தேதியை மாற்ற முடியாது.  பள்ளித் தேர்வுகள், விழாக்கள், பொது விடுமுறை தினங்கள் உள்ளிட்ட பலவற்றையும் ஆராய்ந்த பின்னரே இந்த தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.    இது குறித்து தேதி அறிவிக்கும் முன்னர் எந்தக் கட்சியும் கருத்து கூறவில்லை” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசியல் விஞ்ஞானி சந்தீப் சாஸ்திரி, “கடந்த 35 வருடங்களாகவே பெங்களூரு நகரில் குறைந்த அளவு வாக்குகளே பதிவாகின்றன.  அரசியல் கட்சிகள் தங்களின் இயலாமையை மறைக்க இவ்வாறு தேதியைக் குறை சொல்கின்றன.    அரசியல் கட்சிகள் நகர்ப்புற வாக்காளர்களை வாக்களிக்க செய்ய தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

பெங்களூரு நகரத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டுக் கொள்வதில்லை.  அவர்களுடைய பிரச்னைகளை சீராய்ந்து அவைகளுக்கு தீர்வு கண்டால் நகர்ப்புற வாக்காளர்கள் வாக்களிக்க முன் வருவார்கள்.    தங்களின் குறைகளை தீர்க்க எந்த கட்சியும் முன் வராததால் நகர வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை” என தெரிவித்துள்ளார்.