Random image

பீகார் தேர்தல் உடன்பாடு: கூட்டணி கட்சிகளின் அழுத்தத்திற்கு அடி பணிந்த பாஜக! சச்சின் பைலட்

ஜெய்ப்பூர்:

5 மாநில தேர்தல் முடிவால் ஏற்பட்ட பயம் காரணமாக, கூட்டணி கட்சிகளின் அழுத்தத்திற்கு அடி பணிந்து பீகார்  மாநிலத்தில் குறைந்த அளவிலான இடங்களில் போட்டியிட பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என்று சச்சின் பைலட் கூறி உள்ளார்.

மீபத்தில் நடைபெற்று முடிந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பெரும் தோல்வி அடைந்ததால், வேறு வழியின்றி, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அழுத்தத்திற்கு பாஜக பணிந்துள்ளது என்றும், அதன் காரணமாகவே இரு கட்சிகளும் ஒரே அளவிலான தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளனர் என்று ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் கூறி உள்ளார்.

பீகார்  மாநில தேர்தல் உடன்பாடு குறித்து, ராஜஸ்தான் மாநில துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான  சச்சின் பைலட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமித்ஷா – நிதிஷ் – பஸ்வான் தேர்தல் உடன்பாடு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, தனது கூட்டணி கட்சிகளுடன் பாஜக இப்போது பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி தொகுதிப்பங்கீடுகளை அறிவித்து வருகிறது.

அதன்படி, சமீபத்தில் பீகார் மாநிலத்தில் கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது. 40 தொகுதிகளை கொண்ட பீகார் நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக 17 தொகுதி களிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 17 இடங்களிலும், ராம்விலாஸ் பஸ்வான் கட்சி 6 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பஸ்வான் கட்சி 4 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட நிலையில், தற்போது 6 இடங்களில் போட்டியிடுகிறது.  அதுபோல கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு 22 இடங்களை கைப்பற்றி இருந்தது. ஆனால், தற்போது 17 இடங்களை மட்டுமே  பெற்றுள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவினரிடையே ஏற்பட்டுள்ள தோல்வி பயம் காரணமாகவே, நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிக்கு இணையான அளவில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க., லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், நிதிஷ்குமார் கட்சி தனித்தே போட்டியிட்டது.

ஆனால் 2019ம் ஆண்டு நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்,  நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியும் தேசிய ஜன நாயக கூட்டணியில் இணைந்துவிட்டதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்தது. இதன் காரணமாக,  முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்டிரிய லோக் சமதா தலைவருமான குஷ்வாஹா மந்திரி பதவியில் இருந்து விலகியதோடு, பா.ஜ.க. கூட்டணியில் இருந்தும் வெளியேறினார். இதனால் தொகுதி பங்கீட்டில் மேலும் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து நிதிஷ்குமார் கட்சிக்கு இணையாகவே தேசிய கட்சியான பாஜகவும் தொகுதி பங்கீட்டில் இறங்கி வர வேண்டிய சூழல் உருவானது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில துணைமுதல்வ  சச்சின் பைலட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. அந்த அச்சம் காரணமாகவே பெரும்பான்மை பெற்ற பாஜக தற்போது பலவீனமாகி உள்ளது. பீகாரிலும் அவர்கள் பலவீன மாகவே உள்ளார்கள். அதன் காரணமாகவேத்தான், நிதிஷ்குமார் கட்சியுடன் ஒரே அளவிலான தேர்தல் உடன்பாடு  கொண்டுள்ளது. பாஜக பலவீனமாக இருக்கும்போதுதான் இதுதான் நடக்கும் என்றும் கூறி உள்ளார் .

நடந்து முடிந்துள்ள மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு வலுவான செய்தியை தெரிவித்து உள்ளது. காங்கிரசின் வெற்றி, கட்சி தொண்டர்களின் மன உறுதியைக் காட்டுகிறது. இதே மன உறுதியுடன் 2019ம் ஆண்டு தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி உள்ளது என்றும் அவர் கூறினார்.

பீகார் மாநில பாஜக தேர்தல் உடன்பாடு குறித்து  கருத்து கூறிய பீகார் மாநில முன்னாள் துணைமுதல்வரும்,  ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஷ்வி யாதவ்  “பீகாரில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், பிஜேபி 17 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது இது, பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.

ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து  உபேந்திர குஷ்வாஹா, தெலுங்கு தேசம் போய்விட்டது. சிவசேனா கட்சியும் தற்போது அவர்களுடன் இல்லை. இதனால் வேறு வழியினிறி, நிதிஷ்குமாரின் அழுத்தத்திற்கு பணிந்து,  , பா.ஜ.க.வில் 17 இடங்களை  பெற்றுக்கொண்டுள்ளது என்றும் கூறி உள்ளார்.