மும்பை:

சிவசேனா உறுப்பினர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

சிவசேனா கட்சியின் கேட்கான் நகர பொறுப்பாளர் சஞ்சய் கோத்கர் மற்றும் அக்கட்சி உறுப்பினர் வசந்த் துபே ஆகியோர் கடந்த 7ம் தேதி மாலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இச்சம்பவ நடந்தது.

இச்சம்பவம் தொடர்பாக சந்தீப் குஞ்சால் என்பவர் பார்னர் தாலுகா போலீசில் துப்பாக்கியுடன் சரணடைந்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர்களை சுட்டதாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். எனினும் உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா வேட்பாளருக்கு உதவி செய்ததால் எனது தந்தைக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுத்தார் என்று இறந்த சஞ்சய் கோத்காரின் மகன் போலீசில் தெரிவித்தார்.

இரட்டை கொலை வழக்கில் அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்திலே, இவரது மருமகனும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அகமத்நகர் எம்எஎல்ஏ.வுமான சங்ராம் ஜேக்தப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாலாசாஹீப் கோத்கர் மற்றும் பானுதாஸ் கோத்கர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் உள்ளூர் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 12ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணைக்காக எஸ்பி அலுவலகத்திற்கு எம்எல்ஏ சங்ராம் ஜேக்தாப் வரவழைக்கப்பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 82 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் இரு எம்எல்ஏ.க்களின் உறவினர் காங்கிரஸ் கட்சி சார்பில் விஷால் கோத்கர் போட்டியிட்டார். இதில் விஷால் 2,306 ஓட்டுக்களும், எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் கோத்கர் 1,830 ஓட்டுக்களும் பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட காரணத்தால் சஞ்சய் கோத்கர் மீது எம்எல்ஏ.க்களுக்கு ஏற்பட்ட விரோதம் காரணமாக இக்கொலை சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.