கமதாபாத்

குஜராத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை பா ஜ க வெளியிட்டுள்ளது.

குஜராத் தேர்தலுக்கு வேட்பு மனு செய்ய இன்றே கடைசி தினமாகும் இந்நிலையில் தனது ஆறாவது மற்றும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை பா ஜ க வெளியிட்டுள்ளது.  இந்த பட்டியலில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை.  அதில் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேலும் ஒருவர் ஆவார்

ஆனந்திபென் படேல் தான் இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதிலை என அறிவித்திருந்தார். பாஜக அமைச்சரான ரோகித் படேல் (ஆனந்த் தொகுதி)  பாஜகவின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர்களான நாகர்ஜி தாகூர் (ரதன்பூர் தொகுதி), ஆர் எம் படேல் (ஆஸ்வாரா தொகுதி) வின்சியா புரியா (லிம்கேடா தொகுதி) ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.

முன்னாள் அமைச்சர் ஜெயநாராயண் வியாஸ் முன்பு போட்டியிட்ட தொகுதியான சித்பூரில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  காங்கிரஸில் இருந்து கட்சி மாறிய தேஜஷரிபென் படேல், கானு மக்வானா (கரம்ஷி மக்வானாவின் மகனான இவர் கடந்த ராஜ்யசபை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தவர்)  ஆகியோரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் ஏற்கனவே 76 வேட்பாளர்களைக் கொண்ட மூன்றாவது பட்டியலை வெளியிட்டது.  இன்னும் 20 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை.