கோவை:

கோவையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஜெப கூடத்தில் நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது பாஜக பிரமுகர் உள்பட 5 பேர் அந்த ஜெப கூடத்துக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

‘‘அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருப்பதால் ஜெப கூட்டத்தை உடனே நிறுத்த வேண்டும்’’ என்று கூறி நாற்காலிகளை அடித்து உடைத்து வீசினர். இதில் 3 பேர் காயமடைந்ததாக கிறிஸ்தவ அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த பகுதி பாஜக தலைவர் நந்தகுமார் மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அந்த ஜெப கூடத்தை நடத்தி வரும் பாதிரியார் வினோத்குமார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘அந்த ஜெப கூடத்துக்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஜெப கூடத்தை மூட தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். எனினும் ஜெப நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து நேற்று நடத்தியதால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

மேலும், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக இது போன்று 30 ஜெப கூடங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஜெபம் நடக்கும் போது சத்தம் ஏற்படுத்துவதால் குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் இதில் 5 இடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஜெபம் நடத்த அனுமதி வழங்கி முடியாது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.