பதினாறு வயது சிறுமியை பலாத்காரம் செய்த பாஜகவைச் சேர்ந்தவர் கைது

சென்னை

சென்னை ஆவடி அருகே பதினாறு வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த பாஜகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடி அருகே உள்ள கொள்ளுமேடு என்னும் சிற்றூரில் வசிக்கும் ஒரு தம்பதியினருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார்.  ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்த சிறுமி படித்து வருகிறார்.   சிறுமியின் தாய் தந்தை இருவரும் பணியில் உள்ளனர்

கடந்த 4 ஆம் தேதி பெற்றோர் பணிக்குச் சென்றதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  அந்த நேரத்தில்பாஜகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன் என்னும் 45 வயது ஆசாமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் நடந்ததைக் கூறி அழுத சிறுமியைச் சமாதானம் செய்த பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதையொட்டி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சீனிவாசனைத் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர்.