உறுப்பினர்களே இல்லாத சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான பாஜக

காங்டாக்

சீக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் கடும் தோல்வி அடைந்த பாஜக தற்போது கட்சி மாறிய 10 உறுப்பினர்களால் எதிர்க்கட்சி ஆகி உள்ளது.

சீக்கிம் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சி செய்து  வந்த சீக்கிம் ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் பவன் குமார் சாம்லிங் இம்முறை நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தார். சீக்கிம் மாநில சட்டப்பேரவையில் 17 இடங்களில் வெற்றி பெற்ற சீக்கிம் கிரந்திகாரி மோர்சா அரசு அமைத்தது. சட்டப்பேரவையில் 15 இடங்களில் வென்ற சிக்கிம் ஜனநாயகக் கூட்டணி எதிர்க்கட்சி ஆனது.

முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்குக்கு மற்றொரு அடியாக  அவர் கட்சியைச் சேர்ந்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். ஏற்கனவே இந்த கட்சியின் இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி இந்தக்கட்சிக்கு 13 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இரு இடங்களில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தார் தற்போது 2 உறுப்பினர்கள் உள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. அதனால் அந்தக் கட்சிக்குச் சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாமல் இருந்தது. தற்போது சிக்கிம் ஜனநாயகக் கூட்டணியின் 10 உறுப்பினர்கள் இணைந்ததால் பாஜகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. பாஜக வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள மூன்று தொகுதிகள் இடைத் தேர்தலில் வெல்ல முயற்சி செய்து வருகிறது.