தொ.கா. விளம்பரங்களில் நம்பர் ஒன் பா.ஜ.க.தான்!

--

தொலைக்காட்சி விளம்பரங்களில் பா.ஜ.க. கட்சி முதலிடம் பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது.  தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த வருடம் மே மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.

ஆகவே இந்த ஐந்து  மாநிலங்களுக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. சுவர் விளம்பரங்கள், பொதுக்கூட்டங்கள் என அனைத்து வகையிலும் கட்சிகள் தங்கள் பரப்புரையை செய்து வருகின்றன.

இந்த நிலையில் பிரசாரத்தில் ஒரு பகுதியாக தொலைக்காட்சி விளம்பரங்களில் பாஜக கூடுதல் கவனம் செலுத்துகிறது.

தொலைக்காட்சி விளம்பரத்தில் பாஜக தொடர்பான விளம்பரங்களே அதிகம் இருக்கின்றன. பி.ஏ.ஆர்.சி. ( BARC ) வெளியிட்டுள்ள பட்டியலில் 22,099 புள்ளிகளில் பாஜக அதிக விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.( நவம்பர்10-16 ) அடுத்தப்படியாக நெட்பிலிக்ஸ், டிரிவாகோ, சந்தூர் சாண்டல் சோப் ஆகியவை பட்டியலில் உள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பி.ஏ.ஆர்.சி.யின்  சிஇஓ, “நாட்டின் கடைக்கோடி மக்களும் தொலைக்காட்சியுடன் இணைந்திருக்கிறார்கள்.  ஆகவே  அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி விளம்பரங்களை நாடத்துவங்கியிருக்கின்றன” என்கிறார்.

பாஜகவின் தலைமை ஊடக பிரிவு தலைவர் அனில் பலூனி இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். கட்சி சார்ந்த விளம்பங்களில் பாஜக மட்டுமே பட்டியலில் இடம்பிடித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#bjp #numberone #advertiser #television