72000 எல்.இ.டி. ஸ்க்ரீன்களுடன் துவங்கியது பா.ஜ.க. வின் பீகார் தேர்தல் பொதுக்கூட்டம்

டெல்லி :

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பா.ஜ.க. பீகார் மக்களோடு உரையாட காணொளி காட்சி மூலம் பொதுக்கூட்டம் நடத்தியது.

இந்த பொதுக் கூட்டத்தில், தலைமை தாங்கி பேசிய அமித் ஷா டெல்லியில் இருந்து உரையாற்ற, அதனை காணொளி காட்சிமூலம், பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்ட மாநில பா.ஜ.க. வினர் பாட்னாவில் இருந்தபடி இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பீகார் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 72,000 எல்.இ.டி. திரைகளை வைத்து பொதுமக்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். பாட்னாவில் நிகழ்ச்சி அரங்கு பொதுக்கூட்ட மேடைபோல் வடிவமைக்கப்பட்டிருக்க அதில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அமர்ந்திருந்தனர், டெல்லி அரங்கில் அமித் ஷா உரையாற்ற மேடையில் அமைக்கப்படும் மைக் போன்ற அமைப்புடன் வடிவைமைக்க பட்டிருந்தது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டம் பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பமாகவே தெரிகிறது.

இதில், உரை நிகழ்த்திய அமித் ஷா, “ராந்தல் விளக்கு காலம் போய் இப்போது எல்.இ.டி. விளக்கு காலம் வந்துவிட்டது” என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி சின்னமான ராந்தல் விளக்கை குறிப்பிட்டு பேசினார்.

இதற்கு பதிலளித்து தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ், நாடு முழுவதும் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்கு அழைத்து வர ரயில் கட்டணமாக ரூ. 600 செலுத்த முடியாத பா.ஜ.க. பீகார் முழுவதும் 72,000 எல்.இ.டி. திரைகளை திரை ஒன்றுக்கு ரூ. 20,000 செலவில் மொத்தம் ரூ. 144 கோடி செலவு செய்து தனது பணபலத்தை காட்டியிருக்கிறது, என்று குறிப்பிட்டிருக்கிறார்.