ஜல்லிக்கட்டு மாணவர்களை கொடூரமாக தாக்கிய பாஜகவினர்! தடுக்காமல் வேடிக்கை பார்த்த வானதி!

ஈரோடு: ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பாஜகட்சியினரை, “நிரந்தர சட்டம் தேவை என்று போராடும் மாணவர்கள் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் கொண்ட பாஜகவினர் அந்த மாணவர்களை அடித்து உதைத்துள்ளனர். தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் எதிரில் நடந்த இந்தத் தாக்குதலை அவர் தடுக்காமல்  வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அவசர சட்டத்தை மாநில அரசு கொண்டுவந்துள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள், இது தற்காலிக தீர்வுதான். எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரி தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈரோடு வீரப்பன்பாளையத்தில் பாஜகவினர் ஜல்லிக்கட்டை நடத்த ஒன்பது மாடுகளுடன் ஏற்பாடு செய்தனர்.  ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தும் மாணவர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடி வரும் மாணவர்களையும், இளைஞர்களையும் கடுமையாக அடித்து உதைத்தனர். இந்தத் தாக்குதலில் மாணவர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

பாஜகவினர் ஏற்பாடு செய்த இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசனும் வந்திருந்தார். அவரது முன்னிலையில்தான்,  ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களை, பாஜகவினர் கொடூரமாக தாக்கினர்.

இதை வானதி சீனிவாசன் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக பலர் கேள்விகேட்டதை அடுத்து, பாஜகவினர் தங்களது ஜல்லிகட்டு ஏற்பாடுகளை நிறுத்திவிட்டு மாடுகளுடன் திரும்பிச்சென்றனர்.