மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிப்பது கடினம்…..அமித்ஷாவுக்கு சந்திரபோஸ் கடிதம்

கொல்கத்தா:

மேற்குவங்க பாஜக துணைத் தலைவராக இருப்பவர் சந்திரபோஸ். இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மருமகன். இவர் 3 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ளார். அதில்,‘‘மாநிலத்தில் தற்போது நிலவும் கட்சியின் ஒருங்கிணைப்பு சூழ்நிலையில் மம்தா பானர்ஜியை எதிர்கொள்வது கடினம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் பாஜக.வுக்கு ஏற்பட்டுள்ள தோல்விகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

‘‘மாநிலத்தில் கட்சினரை ஒருங்கிணைத்து செல்வது பலவீனமாக உள்ளது. காவி கொடி ஏந்தியவர்களால் இந்துத்வா கொள்கை கையில் எடுக்கப்பட் டுள்ளது. 10 சதவீத சிறுபான்மையின வாக்குகளை கவர்ந்து இழுக்க முடியாத நிலை உள்ளது. இது கடினமான காரியம். இந்த வாக்குகள் நமக்கு சாதகமாக அமையாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வருவது கடினம். சிறுபான்மையினர் என்பது இஸ்லாமியர்கள் மட்டும் கிடையாது. கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பழங்குடி இன மக்களும் உள்ளனர்.

இவர்களின் ஆதரவு கிடைத்தால் தான் மம்தா பானர்ஜியை எதிர்க்க முடியும். 300 பூத்களில் 77 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேவை. 65 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஏற்கனவே இருப்பதாக மாநில பாஜக தலைமை மத்திய தலைமைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் இதில் உண்மையில்லை. 35 ஆயிரம் உறுப்பினர்கள் கூட இல்லை. இதை நான் கள ஆய்வு மூலம் தெரிவந்து கொண்டேன் ’’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்திரபோஸ் கூறுகையில்,‘‘மேற்கு வங்கத்தில் பாஜக.வை முன்னெடுத்து செல்வதற்காக இந்த கடிதத்தை எழுத வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இங்கு உண்மையிலேயே நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நான் நினைக்கவில்லை. உண்மையான வாக்காளர்களிடம் இருந்து நாங்கள் துண்டிக்கப்பட்டுள்ளோம். பெங்காலி இந்துக்களிடம் எங்களுக்கு தொடர்பே இல்லை. எங்களுக்கு வாக்கு வங்கி அரசியல் மீது நம்பிக்கை இல்லை. மக்கள் நலன் மீது தான் நம்பிக்கை உள்ளது. அனைத்து மத, சமுதாய மக்களை ஒருங்கிணைத்தால் தான் முன்னோக்கி செல்ல முடியும்’’ என்றார்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சதான் பாண்டே கூறுகையில்,‘‘சந்திரபோஸ், சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் கடந்த தேர்தலில் தெற்கு கொல்கத்தா தொகுதியில் போட்டியிட்டார். அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை. மாநிலத்தில் பாஜக நல்ல நிலையில் உள்ளது என்று அவர் கூறியிருந்தால் தான் ஆச்சர்யம். பாஜக.வுக்கு இங்கு எவ்வித வளர்ச்சியும் இல்லை’’ என்றார்.