கொல்கத்தா: பாரதீய ஜனதா – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே, மேற்குவங்க மாநிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மோதலின்போது, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒரு நபரின் மனைவிக்கு, பா.ஜ. சார்பில் வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் காசோலையை அக்கட்சி ரத்துசெய்து அதிர்ச்சியளித்துள்ளது.

கொல்லப்பட்ட அந்த ஏழை விவசாயியை, பாரதீய ஜனதாவின் தொண்டர் என அறிவித்து, அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ரூ.5 லட்சத்திறகான காசோலையை வழங்கியது பாரதீய ஜனதா.

ஆனால், அந்தக் காசோலையை பணமாக மாற்ற, வங்கியில் மரணமடைந்தவரின் மனைவி செலுத்தியபோது, அக்காசோலை பணமின்றி திரும்பி விட்டது.

இதனால், அப்பெண்மணி கடும் அதிர்ச்சியடைந்தார். ‍மேலும், தன்னையும் குழந்தைகளையும் பாரதீய ஜனதா பாதுகாப்பதாக கொடுத்த வாக்குறுதியை அக்கட்சி பொய்யாக்கிவிட்டது என்றுள்ளார்.

ஆனால், காவி கட்சியின் தரப்பில், அப்பெண்மணி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் விலைபோய் விட்டதாகவும், தன் கணவரை ஒரு திரிணாமுல் தொண்டர் என்று வெளிப்படையாக அறிவித்ததால், அவருக்கான நிதியுதவியை ரத்துசெய்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.