மீடியாக்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் பெங்களூரு பாஜக வேட்பாளர்

பெங்களூரு

தெற்கு பெங்களூரு பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா தன்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பும் 44 ஊடகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தெற்கு பெங்களூரு தொகுதியின் மக்களவை வேட்பாளராக தேஜஸ்வி சூர்யா பாஜகவால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் அவ்வாறு அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே சர்ச்சைகள் தொடங்கியது. இவருக்கு முன்பு மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் மனைவி தேஜஸ்வினி குமார் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. ஆனால் ஆர் எஸ் எஸ் அபிமானம் பெற்றவர் என்பதால் தேஜஸ்வி சூர்யா வேட்பாலறாக அறிவிக்கப்பட்டார்.

தேஜஸ்வி சூர்யா வேட்புமனுவை தாக்கல் செய்ததில் இருந்தே அவர் முன்பு சமூக வலைதளங்களில் பதிந்த பழைய பதிவுகளை தேடி எடுத்து எதிர்க்கட்சியினர் பதிய ஆரம்பித்தனர். அதில் குறிப்பாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அவர் பதிந்த பதிவை தற்போது நீக்கியது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து அவர் மீது பல அவதூறு தகவல்களை பல மீடியாக்கள் பரப்புவதாக குற்றசாட்டு எழுந்தது.

அதை ஒட்டி தேஜஸ்வியின் வழக்கறிஞர் பெங்களூரு நிதிமன்றத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தேஜஸ்வி மீது இந்தியாவை சேர்ந்த 44 ஊடகங்கள் மற்றும் 5 சர்வதேச ஊடகங்கள் தவறான மற்றும் அவதூறு தகவல்களை பரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்த ஊடகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடகங்களில் ஆங்கிலம் மற்றும் கன்னட செய்தித் தாட்கள், பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள், கூகுள், வாட்ஸ் அப், முகநூல் மற்றும் யாகூ ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஊடகங்களுக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நோட்டிஸ் குறித்து நீதிமன்ற குறிப்புக்களில் இடம் பெற்வில்லை என தேஜஸ்வியின் வழக்கறிஞர் கூறி உள்ளார்.

ஒரு வேட்பாளர் இவ்வாறு ஊடகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் மனு அளிப்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published.