பாடவுன், உத்திரப் பிரதேசம்

வாக்களிக்க வராத வாக்காளர்கள் வாக்குகளுக்கு பதில் கள்ள வாக்கு அளிக்கலாம் என பாஜக வேட்பாளர் சங்கமித்ரா மவுரியா கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவுகளில் இது வரை இரு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் உத்திரப் பிரதேசம் பாடவுன் தொகுதியில் வரும் 23 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் சங்கமித்ரா மவுரியா போட்டி இடுகிறார்.

உத்திரப் பிரதேச மாநில அமைச்சர் சாமி பிரசாத் மவுரியாவின் மகளான சங்கமித்ரா மவுரியா தனது பேச்சினால் அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருகிறார். சில தினங்கள் முன்பு தனது பாடவுன் தொகுதி மக்களை யாரும் கொடுமைப்படுத்தினால் தாம் ஒரு ரவுடியாக மாறி பழி தீர்ப்பதாக தெரிவித்த சர்ச்சை தற்போது ஓய்ந்துள்ளது.

பாஜக தொண்டர்கள் கூட்டத்தில், ”வாக்களிப்பு அன்று ஒரு சிலர் வாக்களிக்க வராமல் இருக்கலாம். ஆனால் நமது தொகுதியில் முழு வாக்குப்பதிவு நடக்க வேண்டும். ஆகவே அனைத்து வாக்காளர்களையும் அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டும். அப்படியும் ஒரு சிலர் வராமல் இருக்கலாம். அவர்கள் ஓட்டை கள்ள ஓட்டாக பதிவு செய்யலாம். ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும்” என சங்கமித்ரா பேசி உள்ளார்.

அவருடைய உரை வீடியோ பதிவாக வெளியாகி வாக்காளர்களிடையே கடும் பரபர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ பலராலும் பரப்பப் பட்டு வைரலாகி உள்ளது.  மாவட்ட நீதிபதி தினேஷ் குமார் தாம் இந்த வீடியோவை பார்க்கவில்லை எனவும் இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.