டில்லி:

ராகுல் காந்தியை கேலி சித்திரமாக உருவகப்படுத்தி வெற்றி பெறலாம் என்ற பாஜக.வின் தந்திரம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அவரை பாஜக.வின் ஆக்கப்பூர்வ எதிரியாக மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சசிதரூர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ தற்போது கதை மாறி வருகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு எவ்வாறு சந்தேகம் அளிக்கும் வகையிலும், தவறுதலான தகவல்களை அளித்து வருகிறது என்பதை மக்கள் வெளிப்படையாகவே வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர்.

காங்கிரஸ் கட்சி தான் இதை மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ராகுல்காந்தியை கேலி சித்திரமாக பாஜக கடந்த காலங்களில் வெற்றிகரமாக சித்தரித்தது. இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. பாஜக.வுக்கு எதிரான ஆக்கப்பூர்வ எதிரியாக ராகுல்காந்தியை மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் வேகமான முன்னேற்றத்தை இனி பார்க்க போகிறீர்கள்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் கேரளா வெங்கரா தொகுதி இடைத்தேர்தல் வெற்றி மூலம் மக்களின் மாற்றம் வெளிப்ப¬டாக தெரிய தொடங்கிவிட்டது. வீழ்ச்சியை நிலை நிறுத்த குஜராத், கேரளாவில் யாத்திரை நடத்த பாஜக முயற்சி செய்து வருகிறது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘மோடி அரசு தனது வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என்று மக்கள் கேட்க தொடங்கவிட்டதை என்னால் உணரமுடிகிறது. மக்கள் இப்போது தான் உணர்கிறார்கள். ஆனால், 2014ம் ஆண்டிலேயே எங்களுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சியை ராகுல்காந்தி விரைவில் வழிநடத்துவார்.

அவர் தலைமை ஏற்றால் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல் இருக்கும். கட்சிக்கு புதிய சக்தி கிடைக்கும். ஆயிரம் பேர் கொண்ட பாஜக எந்திரம் ஒன்று செயல்படுகிறது. அவர்கள் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கொண்டு என்னை பற்றி உங்களுக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘பொதுத் தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. மாநில தேர்தல் முடிவுகளை வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. நாங்கள் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறோம். அடுத்த 12 மாதங்களில் தெளிவான ஒரு வடிவம் வெளிப்படும்.

ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திடம் இந்தியாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் தீவிரவாதிகள் என்று அனுமானத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது தவறு. அவர்கள் அனைவரும் அப்பாவிகள்’’ என்றார்.