டில்லி:

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்குமாருக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்கும் அமித்ஷா முறைப்படி அழைப்பு விடுத்தார்.

பாஜ.வுடன் கூட்டணி அமைத்த நிதிஷ்குமாருக்கு எதிராக சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தருணத்தில் அமித்ஷாவின் அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்ப டுகிறது.

பீகாரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த சரத்யாதவ் திட்டமிட்டுள்ளார். அதே சமயம் டில்லியில் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அலி அன்வர் கலந்துகொண்டார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் கடந்த மாதம் வெளியேறி பாஜக.வுடன் கூட்டணி அமைத்து கொண்டார். இந்நிலையில் அமித்ஷா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘ நான் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரை எனது இல்லத்தில் சந்தித்தேன். அவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் நிதிஷ்குமார் டில்லியில் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிதிஷ்குமார் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அதிகளவில் சொத்து குவித்தது தொடர்பாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீடுகள், லாலு உறவினர் வீடுகளில் மத்திய புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தின. இதனால் துணை முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வலியுறுத்தியும், அவர் மறுத்ததால் இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டது.

இது குறித்து நிதிஷ்குமார் கூறுகையில்,‘‘ சிறந்த நிர்வாகம் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சூழ்நிலை தற்போது மோசமாக உள்ளது. இதனால் என்னை போன்றவர்கள் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கவர்னரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பதால் மத்திய அரசுடன் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது’’ என்றார்.