2019 தேர்தலுக்கு முன்பு ராமர் கோவில் கட்டப்படும் என்று அமித்ஷா கூறவில்லை….பாஜக மறுப்பு

டில்லி:

2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ராமர் கோவில் கட்டப்படும் என்று அமித்ஷா கூறவில்லை என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பாஜக டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘சில மீடியாக்களில் வெளியான செய்தியை போல் 2019 தேர்தலுக்கு முன்பு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று அமித்ஷா கூறவில்லை. ஐதராபாத்தில் நடந்த பாஜக தலைவர்கள் கூட்டத்தில் ராமர் கோவில் விவகாரம் குறித்து பேசும் திட்டமே இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சேகர் ராவ் கூறுகையில்,‘‘தேர்தலுக்கு முன்பு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று அமித்ஷா பேசவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்ற சூழல் நிலவுகிறது என்று தான் அமித்ஷா குறிப்பிட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.

சேகர் ராவ் கடந்த சனிக்கிழமை அன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையியல்,‘‘ராமர் கோவில் வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார். இதன் கட்டுமான பணி 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு தொடங்கும்’’என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் இரு தலைவர்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பாஜக.விடம் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக தெலங்கானா மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமித்ஷா, நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பில்லை என்றும், மாநிலத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வர கட்சியினர் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.