காங்கிரஸ் சார்பில் போட்டியிட ’ஆலோசிக்கும்’ பாஜக முன்னாள் முதல்வர்

போபால்

த்தியப் பிரதேச முன்னாள் பாஜக முதல்வர் பாபுலால் கவுர் தம்மை காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட அழைத்துள்ளதாகவும் தாமும் அது குறித்து  ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மூத்த அரசியல் வாதியான பாபுலால் கவுர் பாஜகவை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1930 ஆம் வருடம் பிறந்த இவருக்கு தற்போது 89 வயதாகிறது. போபால் கோவிந்த புரம் சட்டமன்ற உறுப்பினராக 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் 1946 முதல் ஆர் எஸ் எஸ் அமைப்பிலும் 1956 முதல் பாரதிய ஜனசங்க கட்சியிலும் உள்ளவர் ஆவார்.

பாபுலால் கவுர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை மத்தியப் பிரதேசத்தின் 17 ஆம் முதல்வராக பதவி வகித்துள்ளார். மத்தியப் பிரதேச அமைச்சரவையில் பல துறைகளின் அமைச்சராக இவர் பதவி வகித்துள்ளார்.

வரும் 2019 ஆம் வருட மக்களவை தேர்தலில் அவரை காங்கிரஸ் சார்பில் போட்டியிடுமாறு கடந்த மாதம் 24 ஆம் தேதி மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.   அது குறித்து பாஜக தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு பாபுலால் கவுர் அந்த அழைப்பை மறுத்துள்ளார்.

தற்போது பாபுலால் கவுர், “கடந்த 15 நாட்களுக்குள் எனது வீட்டுக்கு பல அமைச்சர்கள் வருகின்றனர். அவர்கள் அனைவரும் என்னை காங்கிரஸ் சார்பில் போபால் தொகுதியில் இருந்து போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். நானும் அது குறித்து ஆலோசனை செய்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.