மத்திய பிரதேசத்தில் கோவில்கள், சாமியார்கள், மடங்கள் குறித்த விபரங்களை திரட்டும் பாஜக

போபால்:

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளுங் கட்சியான பாஜக கோவில்கள், சாமியார்கள், மடங்கள் குறித்த புள்ளவிபரங்களை சேகரித்து வருகிறது. 4வது முறையாக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜக இந்த தகவல்களை எதற்காக சேகரித்து வருகிறது என்பது யாருக்கும் தெளிவாக புரியவில்லை.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ரஜ்னிஷ் அகர்வால் கூறுகையில்,‘‘கோவில்கள், மடங்கள், சாமியார்கள், சாதுக்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருவது உண்மை தான். அவர்களை நாங்கள் தொடர்பு கொள்வோம். அது எப்போது என்பது கூற முடியாது’’ என்றார்.

மேலும், சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், கட்சியின் பூத் கமிட்டி அளவிலான மக்கள் செல்வாக்கு மிக்க நபர்கள் குறித்த விபரங்களையும் பாஜக திரட்டி வருகிறது. ஆனால், இதை வைத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை அகர்வால் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் கருத்து கணிப்பு ஒன்று வெளியானது. இதில் பாஜக.வுக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தான் தற்போது கணக்கெடுப்பு பணியை பாஜக மேற்கொண்டு வருகிறது.