கோட்சேவை தேசபக்தர் என்பதை பாஜக கண்டிக்கிறது : ராஜ்நாத் சிங்

டில்லி

காத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என கூறுவதை பாஜக கண்டிக்கிறது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியின் பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா தாகுர் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என மக்களவையில் கூறினார். இது மக்களவையில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.   இதற்காக நேற்று மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.   இந்த எதிர்ப்பு கோஷத்தினால் மக்களவையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்.பி. பிரக்யா தாகுர், கோட்சேவை தேசபக்தர் என்றும், காங்கிரஸ் கட்சியைத் தீவிரவாதக் கட்சி என்றும் பேசியிருக்கிறார். நமது தேச விடுதலைக்கு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள்.

அவ்வாறு இருக்க மக்களவையில் இதுபோன்ற கருத்துகளை பிரக்யா தாகுர் பேசுவதற்கு எவ்வாறு துணிச்சல் வந்தது ? பிரக்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறோம். தொடர்ந்து மகாத்மா காந்தி மற்றும் நேருவின் பெயரைப் பயன்படுத்தி, பாஜக அரசியல் செய்ய முயல்கிறது. இத்தகைய  பாஜகவின் சித்தாந்தத்தால்தான் பிரக்யா தாகுர் இதுபோன்ற கருத்துகளைப் பேசியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

அவைத்தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், “பிரக்யா தாகுரின் பேச்சு அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை என்பதால் இதை விவாதிக்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், “மகாத்மா காந்தியைக்  கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று அழைப்பதையும் இதுபோன்ற கருத்தியலையும் கண்டிக்கிறோம்  முன்பு உள்ளதைப் போல் இன்றும். மகாத்மா காந்தியின் சித்தாந்தம் உள்ளது இந்த மகாத்மா காந்தியின் சித்தாத்தம் தான்  வழிகாட்டி என்பதால் தொடர்ந்து அதைப் பின்பற்றுவோம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரக்யா தாகுர் தனது டிவிட்டரில் ”நாதுராம் கோட்சே பற்றிய எனது கருத்திற்கு நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது கருத்து முற்றிலும் தவறானது. தேசத் தந்தை மகாத்மா காந்தி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என இந்தியில் பதிந்துள்ளார்.