அய்யாக்கண்ணு

தனது பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த பாஜக சதி செய்கிறது என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த ஒன்றாம் தேதி கன்னியாகுமரியிலிருந்து விழிப்புஉணர்வு பிரசார நடைபயண பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந் நிலையில் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய  அய்யாக்கண்னு மற்றும் விவசாயிகள் வந்தனர். அங்கு     பக்தர்களிடம் விழிப்புஉணர்வு நோட்டீஸை விநியோகம் செய்தனர்.

இந்த நிலையில் அங்கு ஆவேசத்துடன் வந்தார் பா.ஜ.க. மகளிரணி மாவட்டச் செயலாளர் நெல்லையம்மாள்.  அவர், ”பக்தர்களுக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்கக் கூடாது’ என அய்யாக்கண்ணுவிடம் கூறினார். இதையடுத்து அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

செருப்பை வீசும் பாஜக பெண்மணி

 

அப்போது திடீரென நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதோடு அய்யாக்கண்ணுவை நோக்கி செருப்பை வீசினார்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்.

அவர்,  “எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுதும்  32 மாவட்டங்களிலும் நடைபயண பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறோம்.

பிரதமராவதற்கு முன்பு  தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. எல்லாக் கோவிலுக்கும் சென்று மோடிக்கு நல்ல புத்தி அளிக்கச் சொல்லி கடவுளை வணங்கி ருகிறோம்.

இந்த நிலையில்தான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாங்கள் சென்றபோது,  என்னை பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் தாக்கினார். இது எங்களது நடைபயணத்தை வேண்டுமென்றே சீர்குலைக்க பா.ஜ.க செய்யும் சதி.

ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயந்து ஒதுங்க மாட்டோம். எங்கள் பயணம் தொடரும்” என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.