லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில்  இடம்பெற்ற பாஜக உள்பட கூட்டணி கட்சிகள் தமிழகத்தில்  பெரும் தோல்வி அடைந்தது. நாடு முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது. இது பாஜக தலைமையிடத்தில் கூட்டணி கட்சியான அதிமுகமீது  கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரான  ஓபிஎஸ் மீது அமித்ஷா கடும் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அதிமுகவில் மீண்டும் பிளவை ஏற்படுத்தி, அதிமுக வாங்கு வங்கியை பாஜகவுக்கு திரும்பும் முயற்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக மேலிடம் தயாராக இருப்பதாக தலைநகர தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி  வருகின்றன.

நடைபெற்ற லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, அதிமுக, பாஜக மீது அக்கறை கொள்ளவில்லை என்றும், பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக பிரபலங்கள் பிரசாரங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் தமிழக பாஜக வினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக  22 சட்டமன்ற இடைத்தேர்தலில் காட்டிய தீவிரத்தை லோக்சபா தேர்தலில் காட்டவில்லை என்றும் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜவினருடன் அதிமுகவினர் இணைந்து பணியாற்றவில்லை என்றும், பாஜகவை வெற்றி பெற வைக்க முடியாத நிலையில், எப்படி அமைச்சர் பதவி கொடுக்க முடியும் என்றும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்பல பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

தமிழகத்தில் பாஜகவின் படுதோல்வி காரணமாகவே மோடியின் மத்தியஅமைச்சரவையில், அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அமைச்சர் பதவி கேட்டு ஓபிஎஸ் டில்லியில் முகாமிட்டும் ஏதும் கிடைக்காத நிலையில் வெறுங்கையோடு திரும்பினார்.

ஓபிஎஸ் உள்பட அதிமுகவின் நடவடிக்கைகளை பாஜக உறுப்பின ராக குருமூர்த்தி, தற்போது நடத்தி வரும் துக்ளக் பத்திரிகையில், ஓபிஎஸ் மற்றும் அவரது மகனை பிச்சைக்காரர் ரேஞ்சுக்கு கேவலப்படுத்தி கார்ட்டூன் வரைந்திருந்தார்.

இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலாக அதிமுகவின் அம்மா நாளிதழில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கழகம் தொடங்கப்பட்டு 42 வருடங்களில் ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சியில் உள்ள அதிமுக ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்ற தில்லை அதனால் இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்குக் கழகத்துக்குச் சிப்பாய்கள் செவிமடுக்காமல் கடந்து போவது ஒன்றே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும்’ என மென்மையாக துக்ளக்கை விமர்சித்து உள்ளது.

ஆனால், பாஜக வட்டாரமோ, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், பா.ஜ.க செல்வாக்கோடு இருக்கக் கூடிய தென்சென்னை, திருப்பூர்  போன்ற தொகுதிகள் கேட்டும் எங்களுக்கு ஒதுக்க அதிமுக மறுத்துவிட்டது… இதனால்தான்  படுதோல்வி ஏற்பட்டது  என்று கூறுபவர்கள், தன் மீதான வழக்கு உட்பட பல்வேறு விஷயங்களுக்கு  மட்டுமே அவ்வப்போது டில்லிக்கு ஓடிவரும் ஓபிஎஸ் தேர்தலில் பாஜகவை கைவிட்டது துரோகம் என்றும், தனது மகனுக்கான உழைத்த ஓபிஎஸ், பாஜக வேட்பாளர்களுக்காக உழைக்கவில்லை என்றும், அதிமுகவினரையும் வற்புறுத்த வில்லை என்று குற்றம் சாட்டுப வர்கள், ஓபிஎஸ்-சால் இனிமேல் பாஜகவுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றும் விமர்சிக்கிறார்கள்.

அதே நேரத்தில் லோக்சபா தேர்தல் முடிவில் கிடைத்த கட்சிகள் வாரியான வாக்குகள் விவரங்களில் அதிமுகவின் வாங்கு வங்கி கணிசமாக சரிந்துள்ள நிலையில், அதிமுகவால் இனிமேல் பாஜகவுக்கு ஆதாயம் இல்லை என்பது தெளிவானதாகவும், இதன் காரணமாகவே,அ.தி.மு.க-வோடு நெருக்கம் காட்டுவது அவசியமற்றது என்று பாஜக தலைமை நினைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, அதிமுகவின் வாக்குகளை பாஜக பக்கம் திருப்பும் நோக்கில், அதிமுகவுக்குள்ளேயே கலகம் மூட்டி குளிர்காய நினைத்துள்ள பாஜக… ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டவும் முடிவு செய்துள்ளது.

இதன் முன்னோட்டமாகவே, அமைச்சரவையில் புறக்கணிப்பு என்றும் தொடர்ந்து, குரூமூர்த்தியை கொண்டு அதிமுகவுக்குள் கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன. முதலில் ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து வெளியேற்றி விட்டால், எடப்பாடி தானாகவே சரண்டர் ஆகிவிடுவார் என்ற எண்ணத்திலும், மேலும் பல மூத்த தலைகள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்சி  நிலையில், அதை வைத்து, அவர்களை பாஜகவுக்கு ஆதரவாக மாற்றி விடலாம் என்ற எண்ணத்திலும் பாஜக தலைமை தனது ஆட்டத்தை தொடங்கி இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதன் முன்னோட்டமே,  குருமூர்த்தி, துக்ளக் இதழில் ஓபிஎஸ் உள்பட அதிமுகவை கடுமையாக சாடி கார்ட்டூன் களை போட்டு, அச்சாரமிட்டு இருப்பதாகவும், ஓபிஎஸ்ஐ ஓரங்கட்டியும், அதிமுகவை மீண்டும் சிதறடித்து, நடைபெற உள்ள , `உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றவும்  அதன்மூலம் அடுத்த  இரண்டு ஆண்டில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவின்  வெற்றியை நிலைநாட்டவும், திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.