போபால்

த்திய பிரதேச மாநிலத்தில் பாஜக 60 லட்சம் போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   அதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு குழு ஆய்வு செய்தது.   குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் இந்த வாக்காளர் பட்டியலில் குறை இருப்பதாக மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி அமைத்த செய்தியாளர்கள் சந்திப்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத், “நாங்கள் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து போலி வாக்காளர்கள் விவரம் அடங்கிய சிடி ஒன்றை கொடுத்துள்ளோம்.  இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.   தவறிழைத்தோருக்கு அவசியம் தண்டனை வாங்கித் தரவேண்டும் எனவும் கூறி உள்ளோம்” என தெரிவித்தார்.

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான ஜோதிராதித்யா சிந்தியா, “பாஜக போலி வாக்காளர்களை சேர்த்துள்ளது நிஜமே.   இது தவறுதலாக நடைபெற்றது அல்ல.   இது வாக்காளர் அடையாள அட்டைகளை இருமுறை உண்டாக்குவது ஆகும்.   101 சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் ஒரே தொகுதியில் இரு வார்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மற்றும் சுமார் 27 லட்சம் பேர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வாக்காளர்களாக பதியப்பட்டுள்ளனர்.   இது போல சுமார் 55 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  இது 101 தொகுதிகளை சோதனை செய்த போது கிடைத்த விவரம் ஆகும்.  இது சுமார் 40% மட்டுமே ஆகும்.   இதுவரை மட்டும் சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் போலியாக கண்டறியப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மாநில தேர்தல் ஆணையாளர் சலீனா சிங், “வாக்காளர் பட்டியல் உருவாக்கும் போது ஒரு சில தவறுகள் நேர்ந்திருக்கலாம்.   ஒரே நேரத்தில் தவறுதலாக ஒரே புகைப்படத்தை இரு இடங்களில் பதிந்திருக்க வாய்ப்புண்டு.   இந்த தவறுகளை மாற்றும் பணிகள் நடைபெற உள்ளன.  விரைவில் மாற்றி அமைக்கப்பட்ட பட்டியல் மாவட்ட நீதிபதிகள் சோதனை செய்த பிறகு வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.